Indian Embassy Congo: காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் கோமாவைக் கைப்பற்றியதை அடுத்து, புகாவுவில் உள்ள இந்தியர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருக்கவும், பயண ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கின்ஷாசா நகரில் உள்ள இந்தியத் தூதரகம், புகாவு நகரில் உள்ள அனைத்து இந்தியர்களையும் "உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு" கேட்டுக் கொண்டுள்ளது. காங்கோவில் இந்தியர்களின் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தூதரகம் கூறியுள்ளது.

முன்னதாக, ருவாண்டா ஆதரவு M23 கிளர்ச்சியாளர்கள் கிழக்கு காங்கோ நகரமான கோமாவைக் கைப்பற்றினர். மேலும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்துவருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கருதி, இந்தியத் தூரகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

"M23 புகாவுவில் இருந்து 20-25 கிமீ தொலைவில் இருப்பதாக தகவல்கள் உள்ளன. பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, புகாவுவில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மீண்டும் அறிவுறுத்துகிறோம். விமான நிலையங்கள், எல்லைகள் மற்றும் வணிக வழிகள் இன்னும் திறந்தே உள்ளன.

அத்தியாவசிய அடையாளங்கள் மற்றும் பயண ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கவும், அவசரகால பயணத்திற்குத் தயார்நிலையில் இருக்குமாறும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மருந்துகள், உடைகள், பயண ஆவணங்கள், உண்ணத் தயாரான உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

புகாவுவில் உள்ள இந்திய குடிமக்கள் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாகவும், முழு பெயர், பாஸ்போர்ட் எண், காங்கோ மற்றும் இந்தியாவில் உள்ள முகவரிகள் உள்ளிட்ட பிற விவரங்களை தூதரகத்திற்கு அனுப்புமாறு இந்தியர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

காங்கோவில் உள்ள இந்தியக் குடிமக்கள் அவசரச் சூழ்நிலையில் +243 890024313 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது cons.kinshasas@mea.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

முன்னதாக ஜனவரி 30 ஆம் தேதி, இந்திய தூதரகம் முதலில் காங்கோவில் உள்ள புகாவு, தெற்கு கிவுவில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இதேபொன்ற அறிவுரையை வழங்கியது.

புகாவு நகரத்தைக் கைப்பற்றிய ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் காங்கோ அரசின் படைகளுக்கும் நடந்துவரும் சண்டை கடந்த வாரம் தீவிரமடைந்துள்ளது. கோமா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறைந்தது 773 பேர் கொல்லப்பட்டதாக அசோசியேட் பிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காங்கோ மோதலுக்கு அமைதியான தீர்வு காணுமாறு இந்தியா வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தது.