காருக்குள் பிணமாகக் கிடந்த இந்திய மாணவர்! அமெரிக்காவில் தொடரும் அட்டூழியம்!
நவம்பர் 9 அன்று, வெஸ்டர்ன் ஹில்ஸ் சாலையில் சுவரில் மோதி நின்ற காருக்குள் ஆதித்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் இருப்பதை சின்சினாட்டி போலீசார் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இந்திய முனைவர் பட்ட மாணவர் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். 26 வயதான ஆதித்யா அட்லாகா என்ற இந்திய மாணவர் சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் நான்காவது ஆண்டாக பி.எச்.டி. பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
நவம்பர் 9 அன்று, வெஸ்டர்ன் ஹில்ஸ் சாலையில் சுவரில் மோதி நின்ற காருக்குள் ஆதித்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் இருப்பதை சின்சினாட்டி போலீசார் கண்டுபிடித்தனர். காலை 6:20 மணியளவில் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக விசாரணையில் தெரிந்துள்ளது.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் 911 என்ற அவசர உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு, ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருப்பதைத் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டின்போது ஆதித்யாவின் காரில் பக்கவாட்டுப் பகுதியிலும் ஜன்னலிலும் மூன்று புல்லட் துளைகள் விழுந்துள்ளன.
ஆதித்யா ஆபத்தான நிலையில் ஹாமில்டன் கவுண்டியில் உள்ள யு.சி. மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அட்லகா தனது மருத்துவக் கல்வியைத் தொடர வட இந்தியாவில் இருந்து சின்சினாட்டிக்கு வந்தார். புது டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் 2018 இல் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 2020 இல் உடலியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D