#UnmaskingChina:ஆபத்துக் கட்டத்தை தாண்டிய இந்திய ராணுவ வீரர்கள்..!விரைவில் கடமையாற்ற திரும்புவார்கள் என உறுதி.
லேவில் சிகிச்சை பெற்று வரும் 18 வீரர்கள் அடுத்த 15 நாட்களில் பணிக்கு திரும்புவார்கள் என்றும், மற்ற 58 வீரர்கள் அடுத்த பதினைந்து வாரங்களில் கடமைக்கு திரும்புவார்கள் எனவும் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 76 வீரர்களும் விரைவில் கடமைக்கு திரும்புவார்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது , மரணம் நிகழ்ந்தது உண்மை என ஓப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் இறந்தனர் என்பதை கூறவில்லை. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் மொத்தம் 76 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 18 வீரர்கள் "லே"வில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் கடுமையாக காயமடைந்துள்ள மற்ற 58 வீரர்கள் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வீரர்களின் நிலைமை பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் உள்ளது என ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. லேவில் சிகிச்சை பெற்று வரும் 18 வீரர்கள் அடுத்த 15 நாட்களில் பணிக்கு திரும்புவார்கள் என்றும், மற்ற 58 வீரர்கள் அடுத்த பதினைந்து வாரங்களில் கடமைக்கு திரும்புவார்கள் எனவும் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் சாதாரண காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னும் பிற ஜவான்கள் அடுத்த ஒருவார காலத்திற்குள் பணிக்கு திரும்பிவிடுவார் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி ஆறுதலை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் சீன மற்றும் இந்திய மேஜர் ஜெனரல்கள், கால்வன் சர்ச்சையை தீர்க்க தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பு சுமார் 6 மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பு கால்வன் பள்ளத்தாக்குக்கு அருகில் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்திய ராணுவம் கடமைப்பட்டுள்ளது என்றும். சீனா தனது எல்லைக்குள் தன் வேலைகளை செய்யும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.