அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை 'மிகப்பெரிய வரி விதிப்பாளர் 'என்று கூறிய நிலையில், அமெரிக்க பைக்குகளுக்கு பட்ஜெட்டில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை விமர்சித்த டிரம்ப்
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் எதிர்பார்த்தபடியே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். தான் முன்பே கூறியபடி கனடா, சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்து இருக்கிறார். ஆனால் இந்திய பிரதமர் மோடியுடன் நல்ல நட்புறவு கொண்டிருக்கும் டிரம்ப், யாரும் எதிர்பாராதவிதமாக இந்தியாவை நேரடியாக விமர்சனம் செய்தார்.
சில நாட்களுக்கு முன்பு புளோரிடாவில் குடியரசுக் கட்சியினர் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், ''சீனா ஒரு மிகப்பெரிய வரி விதிப்பாளர். இதேபோல் இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகளும் அதிக வரியை விதிக்கின்றன. இனிமேல் இந்த நாடுகளை அப்படி நாம் அனுமதிக்க மாட்டோம். பிரிக்ஸ் கூட்டமைப்பின் உள்ள இந்தியா, சீனா, ரஷ்யா தங்கள் நலன்களுக்காக செயல்படுகின்றன. ஆனால் நமக்கு தீங்கு விளைவிக்கின்றன. இந்த நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போகிறோம்'' என்று தெரிவித்தார்.
ஹார்லி-டேவிட்சன் இறக்குமதி வரி குறைப்பு
டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், டிரம்ப்பின் நேரடி விமர்சனம் பல்வேறு அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உயர் ரக மோட்டார் சைக்கிள்கள், கார்கள், போன்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது.
இது ஹார்லி-டேவிட்சன், டெஸ்லா மற்றும் ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது ஹார்லி-டேவிட்சன் போன்ற உயர்ரக பைக்குகளுக்கன இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் செமி-நாக் டவுன் (SKD) கிட்களுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா பணிந்ததா?
இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமெரிக்க ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதை அதிகரிக்கும் என்பது பொருளாதர நிபுணர்களின் கூற்றாக உள்ளது. இதேபோல் 40,000 டாலர்களுக்கு மேல் விலையுள்ள ஸ்டேஷன் வேகன்கள் மற்றும் ரேஸ் கார்கள் உட்பட சொகுசு கார்களுக்கான இறக்குமதி வரியும் 125 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தனது முதலாவது பதிவிக் காலத்திலேயே ஹார்லி டேவிட்சனுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். இப்போதும் 'இந்தியாவை மிகப்பெரிய வரிவிதிப்பாளர்' என்று அவர் குற்றம்சாட்டிய நிலையில், பட்ஜெட்டில் உயர்ரக பைக்குகள், கார்களுக்கான இறக்குமதி வரி குறைக்கபட்டுள்ளது டொனால்ட் டிரம்ப் எதிர்ப்புக்கு இந்தியா பணிந்ததா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
மத்திய நிதியமைச்சர் மறுப்பு
ஆனால் இதை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், அதை ஒரு உற்பத்தி மையமாக மாற்றவும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியா பொருளாதாரம் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை'' என்று விளக்கம் அளித்தார்.
