பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா  மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி  குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்தியா பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டு காலமாக காஷ்மீர் விவகாரத்தில் பகை இருந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி இரு நாட்டுக்கும் இடையே  எல்லையில் மோதல் வெடித்து வருகிறது. அதே நேரத்தில் சீனாவின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக ஐநா மன்றம் வரை புகார் கொண்டு சென்றுள்ள பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மன்றம் மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில் இந்தியா தன் நாட்டு எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது முகாம்களையும் குறிவைத்து தாக்கி வருகிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இந்திய ராணுவம் அழித்தது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அதாவது பாக் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி  இரண்டு நாள் அமீரக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் துபாய் வந்த அவர் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இச்சந்திப்பைத் தொடர்ந்து அபுதாபிக்கு சென்ற  ஷா மஹ்மூத் குரேஷி  அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பங்காளி நாடான  இந்தியா-பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, எங்களது உளவுத்துறை இதை உறுதி செய்துள்ளது. இந்த பிரச்சனை மிகத் தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது, எங்களிடம் நட்பாக உள்ளவர்களிடமிருந்து எங்களைப் பற்றி  தகவல்ளை பெற இந்தியா முயற்சித்து வருவதும் எங்களுக்கு தெரியும். இந்தியாவில் அதிகரித்து வரும் உள்நாட்டுப் பிரச்சனை மற்றும் விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், பிளவுபட்டுக் கிடக்கும் நாட்டை ஒன்றிணைக்கவுமே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது. 

பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்திய நிதி அளிப்பது அம்பலமாகிவிட்டது, அதேபோல் பாகிஸ்தானை தவறாக விமர்சிக்கவும், இழிவு படுத்தவும்  இந்தியாவால் தொடங்கப்பட்ட போலி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக  வலைதளங்கள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதல் திட்டம் தெற்காசியப்  பிராந்தியத்தில் அமைதியின்மையையும், ஆபத்தையும் விளைவிக்கக் கூடும், அதேபோல் ஆப்கனிஸ்தான் உடனான சமாதான உடன்படிக்கையை இது பாதிக்க கூடும், இந்திய ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க பாகிஸ்தான் ராணுவம் எப்போதும்  தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.