Moscow Attack: ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தீவிரவாத தாக்குதல்.. 60 பேர் பலி..!
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருக்கும் நிகழ்ச்சி ஹால் ஒன்றில் நடந்து வந்த இசை கச்சேரி நிகழ்ச்சியின்போது ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் க்ரோகஸ் நகரில் இருக்கும் நிகழ்ச்சி நிரல் இடத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது வந்தது. ஹால் முழுவதும் மக்கள் குழுமி இருந்தனர். அப்போது திடீரென ஹாலுக்குள் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டு, 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதனால் அந்த இடமே பதற்றத்திற்கு உள்ளானது. யார் இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என்ற தகவல் உடனடியாக வெளியாகாமல் இருந்தது. ஆனால், இந்தத் தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கத்தின் செய்தி ஏஜென்சியான அமாக் தனது டெலிகிராமில் தெரிவித்து இருந்தது. இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த ரஷ்ய அதிகாரிகள் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
“5 குழந்தைகள் உட்பட 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்தார். வயது வந்த 110 நோயாளிகளில், 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் கூறினார்.
உருமறைப்பு சீருடை அணிந்த தாக்குதல்காரர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்தனர் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தினர் மற்றும் வெடிகுண்டுகள் அல்லது தீக்குண்டுகளை வீசினர் என்றும் கூறப்படுகிறது. மண்டபத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் கறுப்பு புகை வெளிவரும்புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இதனை உறுதி செய்தன. மூன்று ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
பல ஆயிரம் பேர் தங்கக்கூடிய மாபெரும் கச்சேரி அரங்கில் தண்ணீரைக் கொட்டி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து தப்பிக்க, மண்டபத்தில் உள்ள இருக்கைகளுக்குப் பின்னால் ஏராளமானோர் மறைந்தனர். சிலர் நுழைவாயில்களை நோக்கி விரைந்தனர். நள்ளிரவுக்குப் பிறகு, தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெளியான புகை மண்டலம் நகர் முழுவதும் பரவி இருந்தது. தீ பிழம்பு அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் இருந்த மக்கள் தங்களுக்கு அடைக்கலம் தேடி அலறியடித்து ஓடும் வீடியோ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத்தின் கோர முகத்தை மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளது.
அரசு நடத்தும் RIA நோவோஸ்டி வெளியிட்டு இருக்கும் செய்தியில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் "தானியங்கி ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" மற்றும் "ஒரு கையெறி குண்டு அல்லது தீயை உருவாக்கும் வெடிகுண்டை வீசினர், அது தீயை உண்டாக்கியது" என்று தெரிவித்துள்ளது. பின்னர் அவர்கள் "ஒரு வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது" என்று செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்கொள்ளவிருக்கும் தாக்குதலை ரஷ்ய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. உளவுத்துறை மூலம் தங்களுக்கு இந்த தகவல் தெரிந்து இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதமே ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி மாஸ்கோ தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது" என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென தனது வேலையை மீண்டும் காட்டி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டில் இதே மாதிரியான ஒரு தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் அரங்கேற்றி இருந்தது. ஆப்கானிஸ்தானை இருப்பிடமாகக் கொண்டு தாக்குதலை நடத்தி வந்த ஐஎஸ்ஐஎஸ் தற்போது பல நாடுகளில் பரவி இருப்பிடங்களை அமைத்துக் கொண்டுள்ளது.
நியூயார்க்கை இருப்பிடமாகக் கொண்டு இருக்கும் சவ்போன் பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வாளர் கோலின் பி கிளார்க் கூறுகையில், ''ஐஎஸ்ஐஎஸ் - கே என்ற அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!