இந்தியாவுக்கு உதவ முன்வந்த அடுத்த வல்லரசு நாடு... 8 ஆக்ஸிஜன் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க முடிவு...!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறைய சரி செய்யும் விதமாக 8 ஆக்ஸிஜன் தயாரிப்பு இயந்திரங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் கோரதாண்டவம் பெரும் அச்சத்தை உருவாக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது. இப்படி நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு மாநிலங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு திணறும் இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இப்படிப்பட்ட கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்ப பல நாடுகள் முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு உதவ சீனா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் அரசும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறைய சரி செய்யும் விதமாக 8 ஆக்ஸிஜன் தயாரிப்பு இயந்திரங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஆக்ஸிஜன் தயாரிப்பு இயந்திரமும் 250 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 28 வென்டிலேட்டர்களையும், 200 எலக்ட்ரிக் சிரிஞ்ச் பம்புகளையும் முதல் தவணையாக இந்த வாரத்திற்குள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.