இந்தியா, சீனா, மெக்சிகோவை தவிர டிரம்பை உலகமே ஆதரிப்பது போல் அவரது மகன் ஜூனியர் டிரம்ப் உலக வரைபடத்தை சித்தரித்து வெளியிட்டுள்ளார். அதில் காஷ்மீர், வடகிழக்கு பகுதிகளை இந்தியாவிலிருந்து நீக்கியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. வெற்றி முடிவுகளை தேர்தல் வரைபடம் மூலம் விளக்குவார்கள். அமெரிக்க வரைபடத்தில் குடியரசு கட்சி வென்ற மாநிலங்களை சிகப்பு நிறத்திலும், ஜனநாயக கட்சி வென்ற மாநிலங்களை நீல நிறத்திலும் வண்ணம் தீட்டி பிரித்து காண்பிப்பார்கள். இந்த நிலையில் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் 'தேர்தல் வரைபடம் பற்றிய என்னுடைய கணிப்பு' என்று கூறி உலக வரைபடத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா, சீனா, மெக்சிகோ ஆகியவற்றை நீல நிறத்திலும், பிற நாடுகளை சிகப்பு நிறத்திலும் காட்டியுள்ளார். அதிலும் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் சிகப்பு நிறத்தில் உள்ளன.

இதன் மூலம் அவர் கூறுவது என்னவென்றால், இந்தியா, சீனா, மெக்சிகோவை தவிர உலக நாடுகள் அனைத்தும் தனது தந்தையை ஆதரிப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த வரைபடத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்., எம்.பி., சசி தரூர், மோடியின் வெளியுறவு கொள்கையை விமர்சித்துள்ளார். “டிரம்பை கட்டித்தழுவியதற்கான பரிசு இது. காஷ்மீர், வட கிழக்கு பகுதிகள் இந்திய வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு தான் பல கோடிகள் செலவு செய்து தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.” என காட்டமாக கூறியுள்ளார்.