பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

 

172 உறுப்பினர்களை கொண்டு இம்ரான் கான் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தங்க இம்ரான் கான் மறுத்துவிட்டார். அதற்கு பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இம்ரான் கான் கூறுகையில் நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. பாகிஸ்தான் பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கார்கள் 33 குண்டு துளைக்க முடியாதவை. நான் பறப்பதற்கு விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளன. பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினார். ஆனால், மறுபக்கத்தில் நம்முடைய மக்களுக்கு உதவுவதற்குப் பணம் இல்லை என்றார். 

இஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வசிக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ செயலாளரின் இல்லத்தில் தங்க முடிவு செய்து இருக்கிறேன். மேலும் தனக்கு 2 பணியாளர்களும் 2 கார்களும் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றால், கோடீஸ்வரர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.