imran khan pakistan : ஆட்சியை கலைச்சாலும் இம்ரான் கான்தான் பிரதமர்!: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா
imran khan pakistan : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோதம்
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லாது, சட்டவிரோதமானது என சபாநாயகர் ரத்து செய்துவிட்டார்
விரைவில் தேர்தல்
இதைத் தொடர்ந்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான் “நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபருக்கு நான் பரிந்துரைக்கப் போகிறேன். நடக்கின்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் சபாநாயகர் முடிவுக்காக ஒவ்வொரு பாகிஸ்தான் மக்களும் அவரைப் பாராட்டுகிறார்கள்.வெளிநாட்டு அரசின் சதியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. யார் நம்மை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கலைப்பு
பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்கப்படுவதாக ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. பாகிஸ்தானில் அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை தேசத்தின் காபந்து பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார்.
3 மாதத்துக்கு இம்ரான் பிரதமர்
இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்குவதற்காகத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையே எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. ஆனால் தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் ஆட்சியைக் கலைக்க பரிந்துரை செய்த இம்ரான் கான், அடுத்த 3 மாதங்களுக்கு தானே பிரதமர் பொறுப்பையும் வகிக்க உள்ளார்.
சட்டவிரோதம்
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது உலகிற்குத் தெரியும். ஆனால் கடைசி நேரத்தில் சபாநாயகர் சட்டவிரோதமான நடவடிக்கை எடுத்துவிட்டார்.
பாகிஸ்தான் சட்டம் நொறுக்கப்பட்டது. சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இன்று நடக்க வேண்டும். வாக்கெடுப்பு நடக்கும்வரை எதிர்க்கட்சிகள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்கள் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்பார்கள். நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடாது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டும். இந்த சிறுபிள்ளைத்தனமான செயலால் இம்ரான் கான் யாரென்று உணர்த்திவிட்டார் ” எனத் தெரிவித்தார்
ஆட்சி கிவிழும்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் 342 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 172 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அந்தவகையில் 179 உறுப்பினர்கள்ஆதரவுடன் பிரதமராக இம்ரான் கான் ஆட்சி நீடித்து வந்தது. ஆனால், இம்ரான்கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கூட்டணியில் இருந்த 10க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அதிருப்தியுடன் இருந்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் பி.எம்.எல்.-என் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இம்ரான் காணுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று காலை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதை ஏற்க துணை சபாநாயகர் குவாசிம் கான் சூரி மறுத்துவிட்டார்.