பாக். இடைக்காலப் பிரதமர் பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை... இம்ரான் கான் அதிரடி!!
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார்.
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார். பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இந்த நிலையில்யாரும் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி, அதிபர் ஆரிப் ஆல்விக்கு, பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை செய்தார். இதை ஏற்ற அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்து, அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன. இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் ஆல்வி. தேர்தல் நடைபெறும் வரை இம்ரான் கான் அதிபர் பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் பிரதமர் பதவியில் தொடர முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக பிரதமராகச் செயல்பட தங்கள் பரிந்துரையை அளிக்குமாறு இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு அதிபர் ஆரிஃப் ஆல்வி கடிதம் எழுதினார். அடுத்த 3 நாட்களில் இரு தரப்பிற்கும் இடையே இடைக்கால பிரதமர் நியமனத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் சபாநயர் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் உடன் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் ஆரிஃப் ஆல்வி குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், இந்த நடைமுறையைச் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், இதில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதிபரும் பிரதமரும் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறி உள்ளதாகவும் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் பரிந்துரைப்படி செயல்படுவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். இந்தச் சூழலில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை பரிந்துரை செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் குல்சார் அகமது. இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகள் குல்சார் அகமது தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.