இம்ரான் கானுக்கு புத்தி சரியில்லை.. மன நோயாளி.. போட்டு தாக்கிய முன்னாள் பிரதமரின் மகள்..
இம்ரான் கான் புத்தி ஸ்வாதீனமாக இல்லை என்றும் மன நோயாளி போல் செயல்படுகிறார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் குற்றச்சாட்டியுள்ளார்.
இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 3ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில், துணை சபாநாயகர் காசிம்கான் சுரி நிராகரித்தார். மேலும் பிரதமர் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும் 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இம்ரான் கான், முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை காபந்து பிரதமராக நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்து செல்லாது என்று உத்தரவிடும் படி எதிர்க்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதாக கூறுவதற்கான ஆதாரம் பற்றியும் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டது. மேலும் பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த முடிவு சட்டவிரோதமானது. நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. நாடாளுமன்றம் மீண்டும் செயல்படலாம் என்று உத்தரவிட்டது.
சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடி தீர்மானத்தின் மீது விவாதம் துவங்கிய நிலையில், பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் இதே கோரிக்கையை முன்வைத்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு மேல் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம், இம்ரான் கான் புத்திஸ்வாதீனமாக இல்லை. மனநோயாளி போல் செயல்படுகிறார். அவர், ஒட்டு மொத்த நாட்டையே பிணைய கைதி போல் மாற்றியுள்ளார் என்று கூறியுள்ளார். முன்னதாக இம்ரான் கான், எந்த சூழ்நிலையிலும் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இறுதி வரை போராடுவேன் என்றும் தெரிவித்து வருகிறார்.