நான் இன வெறியன் கிடையாதுங்க - அலறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்....
நான் இன வெறியன் கிடையாது என்று மேற்கு பாலம் பீச் பகுதியில் உள்ள சர்வதேச கோல்ப் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
ஜனாதிபதி டிரம்பை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 11-ஆம் தேதி சந்திக்கச் சென்றிருந்தனர்.
வாஷிங்டன், வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகத்தில் டிரம்பை சந்திக்க சென்ற உறுப்பினர்கள் குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்வது தொடர்பாக பேசினர்.
அவர்களிடம் பேசிய டிரம்ப், “அந்த ஆசனவாய் நாடுகளில் இருந்து வந்த மக்களை நாம் ஏன் இங்கே வைத்திருக்க வேண்டும்? அவர்களுக்கு பதிலாக நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருகிற குடியேறிகளை நாம் வைத்துக் கொள்ளலாமே? நமக்கு இன்னும் கூடுதலான ஹைதி நாட்டினர் எதற்காக வேண்டும்? அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்று கூறி சர்ச்சையை எழுப்பினார்.
இந்த சர்ச்சைக்கு உரிய அவதூறு கருத்தை வெளியிட்டதற்காக டிரம்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்கள் என ஏராளமானோர் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, டிரம்பின் இந்த அவதூறு பேச்சுக்கு ஆப்பி ரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. மேலும், ஆப்பிரிக்க நாடுகள் மீது டிரம்ப் தனது இனவெறியை காட்டியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
ஆனால், மன்னிப்பு கேட்க டிரம்ப் மறுத்துவிட்டார். மேலும், தான் உள் நோக்கத்துடன் பேசவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று ‘மேற்கு பால்ம் பீச்‘ பகுதியில் உள்ள சர்வதேச கோல்ப் கிளப்பில் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "நான் இன வெறியன் கிடையாது. நீங்கள் என்னை பேட்டி காணும் போதெல்லாம் சிறிதளவு கூட இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.