நம்ம தலைவர்கள் வாழ்த்து சொல்லலைன்னா என்னடா.! ஜோ பைடன் குத்துவிளக்கே ஏத்திட்டாரு.. துள்ளிக் குதிக்கும் பாஜக.!
அமெரிக்காவில் 20 மாகாணங்கள், 18 நகரங்களில் நவராத்திரி, தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அறிவித்தனர். இதை பாஜகவினர் வரவேற்றனர். தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தீபாவளி வாழ்த்துச் செய்தியும் பாஜகவினரை திக்குமுக்காட வைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் தன் மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் தீபாவளி களையிழந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் வழக்கம்போல் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை நாட்டு மக்கள் கொண்டாடிவருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தொடங்கி பல கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழகத்திலும் பல கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆளும் திமுக தலைமையும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலரும் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை.
சமூக ஊடகங்களில் இதைப் பாஜகவினரும், பாஜக ஆதரவு இயக்கத்தினரும் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லியும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும். பிரிவிலிருந்து ஒற்றுமை. விரக்தியிலிருந்து நம்பிக்கை. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று வாழ்த்துச் செய்தியில் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த வாழ்த்து செய்தியையும் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றிய புகைப்படமும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. குறிப்பாக பாஜகவினர் இப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இப்படத்தைப் பகிர்வோர் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத தலைவர்களைக் குறை கூறியும் வருகிறார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் 20 மாகாணங்கள், 18 நகரங்களில் நவராத்திரி, தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அறிவித்தனர். இதை பாஜகவினர் வரவேற்றனர். தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தீபாவளி வாழ்த்துச் செய்தியும் பாஜகவினரை திக்குமுக்காட வைத்துள்ளது.