உலக அமைதிக்காக தான் ஆற்றிய பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் மற்றும் காங்கோ-ருவாண்டா மோதல்கள் உள்ளிட்ட பல உலகளாவிய பிரச்சினைகளில் தான் முக்கிய இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
தனக்கு ஏற்கெனவே 4-5 முறை நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ருவாண்டா, காங்கோ, செர்பியா, கொசோவோ என பல காரணங்களுக்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் இந்தியா - பாகிஸ்தான் மோதலைத் தடுத்தது மிகப்பெரியது" என்று கூறினார். "எனக்கு நான்கு அல்லது ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்." எனவும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் அதிருப்தி:
தனக்கு நோபல் பரிசு வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த டிரம்ப், "அவர்கள் எனக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அதை லிபரல்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்." என்று கூறினார்.
சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது டிரம்ப்பின் ராஜதந்திர தலையீட்டைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் அரசு அவரை 2026ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டது. "சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியின் போது அவரது ராஜதந்திர தலையீடு மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, அதிபர் டொனால்டு டிரம்புக்கு 2026ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிக்க தான் உதவியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்திய அரசு அவரது கூற்றை நிராகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், காங்கோவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் திங்கட்கிழமை ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
பலிக்காத பரிந்துரைகள்:
ஏற்கெனவே டிரம்ப அமைதிக்கான நோபல் பரிசு பெற பல முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு இதுவரை அந்தப் பரிசு வழங்கப்படவில்லை. ஆபிரகாம் ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலுக்கும் பல அரபு நாடுகளுக்கும் இடையியே அமைதி ஒப்பந்தங்கள் ஏற்பட பங்காற்றியதற்காக, அந்நாடுகள் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்தன.
நார்வே நோபல் குழுவால் ஆண்டுதோறும் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் அமைதியை மேம்படுத்துவதற்கும், மோதல்களைத் தீர்ப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். டிரம்ப்பின் விருப்பம் குறித்து நோபல் குழு ஒருபோதும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்ததில்லை.
