அமெரிக்காவை தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்யும் அளவிற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார் நிலையில் இருக்கிறேன் என ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ-பிடன் தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது 77 வயது ஆவதால் அவர் மிகவும்  வயதான அதிபராக இருப்பார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரது வயதை காரணம் காட்டி அவருக்கு எதிராக பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தப் பேரிடருக்கு மத்தியிலும், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதியாக ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ-பிடன் களம் காண்கிறார். 

கொரோனா வைரஸ் ஒருபுறமிருந்தாலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டார் என ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பை தாக்கி வரும் நிலையில், பிடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "எப்போதும் தூக்க கலக்கத்தில் இருக்கும் ஜோ-பிடன் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அல்ல என்றும் அவர் வெற்றி பெற்றால் அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறிவருகின்றனர். அதாவது ஜோ-பிடனுக்கு தற்போது 77 வயது ஆகிறது, அமெரிக்க ஜனாதிபதியாக மிகப்பழமையான நபராக இவர் கருதப்படுகிறார். அவர் வெற்றி பெற்றால் தனது 78 ஆவது வயதில் பதவியேற்பார். பொதுவாக அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெறும் ஒருவர் இரண்டு முறை ஜனாதிபதியாக போட்டியிட முடியும்.  ஒருவேளை ஜோ பிடன் வெற்றி பெற்றால் அவர் இரண்டு முறை ஜனாதிபதி பதவி வகிக்க தகுதி உடையவராக இருப்பாரா?  வயோதிகம் காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது? 

இரண்டு பதவிக் காலத்திற்கு வேலை செய்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பேட்டி கண்டது, அதற்கு பதில் அளித்த அவர், " இது ஒரு சரியான கேள்வி என்று நான் நம்புகிறேன்,  70 வயதுக்கு உட்பட்ட எந்த ஒரு நபரிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி,  ஆரோக்கியமாக இருக்கிறேனா?  தயாராக இருக்கிறேனா என்று கேட்கிறீர்கள்.  என்னைப் பாருங்கள், மாண்புமிகு ஜனாதிபதி ஆக நான் தகுதியாக இருக்கிறேனா என்பதை நீங்களே பாருங்கள் என்றார்"  மேலும்,  நான் இரண்டு பதவிக் காலத்திற்கும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்,  என உறுதிபட கூறினார். அந்தப் பேட்டியின் போது துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உடனிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டிற்கு பிறகு இது முதல்  நேர்காணலாகும். தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்புக்கு தற்போது 74 வயது ஆகிறது. அவர்  70 வயதில் பதவி ஏற்றார் இவரே அமெரிக்காவில் வயது மிகுந்த ஜனாதிபதியாக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடதக்கது.