அமெரிக்க அதிபர் ேதர்தலில் கிடைத்த தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். டிரம்பின் தலைமையில் அனைவரும் முன்னேற வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உருக்கமாகப் பேசினார்.
தேர்தல் தோல்வி
அமெரிக்க அதிபர் தேர்ததில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என பெருவாரியான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
தேர்தலில் அடைந்த தோல்விக்குப்பின், நியூயார்க்கில் நேற்று நடந்த கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசினார். அப்போது, ஹிலாரி, அவரின் கணவர் பில் கிளிண்டன், ஹிலாரி மகள் செல்சீ, ஹிலாரி மருமகன் மார்க், துணை அதிபர் வேட்பாளர் டிம் கெயின் ஆகியோர் மேடைக்கு வந்தவுடன் ஆதரவாளர்கள் எழுந்து நின்று, கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

அப்போது ஹிலாரி கிளிண்டன் மேடையில் தோன்றி ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
வேதனை
நாம் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தோம். ஆனால், இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் வெற்றிபெறாததற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீண்டகாலத்துக்கு இந்த தோல்வி எனக்கு வேதனையைக் கொடுக்கும்.
வாழ்த்து
தேர்தல் முடிவுகள் வந்தவுடன், டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறி, நாட்டுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தேன். அனைத்து அமெரிக்க மக்களுக்கும் சிறந்த அதிபராக டிரம்ப் இருப்பார் என நம்புகிறேன்.

அரசியலமைப்பு
இந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொண்டு, டிரம்பின் தலைமையில் நாம் முன்னேற வேண்டும். இந்த நாட்டை தலைமை ஏற்று டிரம்ப் நடத்திச் செல்ல வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். அமைதியான முறையில், அதிகாரத்தை அடுத்து வரும் அரசுக்கு மாற்றுவதைத்தான் நமது அரசியலமைப்பு கூறுகிறது.
எனக்கு ஆதரவு அளித்த ஆதரவாளர்கள், மக்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவின் பிரதிநிதியாக என்னை நீங்கள் முன்னிலைப்படுத்தியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை.

இரு பிரிவு
அதே சமயம், நமது நாடு, ஆழமாக இருபிரிவுகளாக பிரிந்து இருப்பதை பார்க்கிறேன். அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் சட்டத்தின் ஆட்சியையும், அனைவருக்கும் சம உரிமையையும், மரியாதையையும், வழிபாட்டு சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிசெய்கிறது. அந்த மதிப்புகளுக்கு நாம் மரியாதை அளித்து, அதைப் பாதுகாக்க வேண்டும்.
பாதுகாக்க வேண்டும்
நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும். நம்முடைய நாட்டையும், பூமியையும் பாதுகாக்க வேண்டும். நமக்கு எதிராக இருக்கும் அனைத்து தடைகளையும் உடைத்து, நம்முடைய கனவுகளை அடைய வேண்டும். வெற்றியும், தோல்விகளும் வந்தாலும் அதைத்தாண்டி முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஹிலாரி கூட்டத்தில் பேசி முடித்ததும் அவரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கைகுலுக்கி கண்ணீருடன் விடைபெற்றனர்.
