ஐ லவ் சிங்கப்பூர்! 58வது தேசிய தினம் கொண்டாட தயாராகும் சிங்கை மக்கள்!
சிங்கப்பூர் மலேசியாவிடம் இருந்து விடுதலை அடைந்த 58வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆகஸ்ட் 9 அன்று நாட்டின் தேசிய தினத்தைக் கொண்டாட சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்படுகின்றன.
மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூரில் தேசிய தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் சிங்கப்பூர் 58 வயதை எட்டுகிறது. அங்கு உள்ள பல கட்டிடங்கள் வரிசையாகக் அந்நாட்டின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பிளாக் 406 ஆங் மோ கியோ அவென்யூ 10 இன் முகப்பில் தேசியக் கொடிகளால் "ஐ லவ் சிங்கப்பூர்" என்ற வாசகம் உருவாக்கப்பட்டது. பல வீடுகளில் வாசலில் சிங்கப்பூர் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
பிளாக் 652 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 61க்கு அருகில் சிங்கப்பூர் கொடி வடிவில் 672 மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை உருவாக்குவதில் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 350 பேர் கலந்துகொண்டு காலியான பாட்டில்களை வழங்கியுள்ளனர்.
சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சிறப்பாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் வகையில் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது.