கோஷங்கள் எழுப்புவது, வகுப்புகளை புறக்கணிப்பது, புரட்சிகர பாடல்களை பாடுவது போன்ற போராட்டங்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் இனி மாணவர்கள் ஈடுபடக்கூடாது என ஹாங்காங் கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஹாங்காங்கில், சீனா கொண்டுவந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு முதல் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக கூறி சுமார் 1500 க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஹாங்காங் கல்வி அமைச்சர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தடை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். ஹாங்காங்கில்  சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. அதாவது, ஹாங்காங்கில் குற்றப்பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டவரைவை எதிர்த்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பதுடன், நாட்டில் சீன தலையீட்டை அதிகரிக்க செய்யும் எனவும் ஹாங்காங் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். 

தன்னுடைய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங்கை1997ஆம் ஆண்டு பிரிட்டன் சீனாவிடம் ஒப்படைத்தது. சட்டம் இயற்றுதல், நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரங்களுடன் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமாக தொடரும் எனவும், பாதுகாப்பு அதிகாரங்கள் மட்டும் சீனாவிடம் இருக்கும் என்றும் பிரிட்டன்-சீனா இடையே கையொப்பம் செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் சீனா ஹாங்காங் மீது செலுத்தி வருகிறது.  ஹாங்காங் மீது சீனாவுக்கே முழு இறையாண்மை உள்ளது எனவம் சீனா கூறி வருகிறது. இந்நிலையில் புதிய சட்டத்தின் மூலம் ஹாங்காங் இன்னொரு சீன நகரத்தை போல ஆகிவிடக் கூடாது என ஹாங்காங் மக்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை ஒடுக்கும்  நடவடிக்கையில்  சீனா அதிதீவிரமாக ஈடுபட்டுவருகிறது. சீனாவின் இந்நடவடிக்கைக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சீனா தான் திட்டமிட்டபடியே தன் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இச்சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே ஹாங்காங்  கல்வி அமைச்சர் கெவின் யியுங், ஹாங்காக் மாணவர்கள் இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது அப்படி மீறி நடைபெறும் போராட்டங்களை பள்ளிகள் கவனித்து ஒடுக்க வேண்டும் எனவும், ஹாங்காங்கில் பல மாதங்களாக நீடித்து வரும் சமூக மற்றும் அரசியல் சம்பவங்கள் மற்றும் வன்முறை, சட்டவிரோத சம்பவங்களில் மாணவர்களின் தொடர்பு அதிகரித்துள்ளது, நிச்சயம் அது ஒடுக்கப்பட வேண்டும். அதேபோல சீன தேசிய கீதத்திற்கு எதிராக "குளோரி டூ ஹாங்காங்" என்ற பாடலை இனி இசைக்கக்கூடாது, பள்ளிகளில் அந்த பாடலை ஒளிபரப்பவும் அனுமதிக்கக்கூடாது, கூடுதலாக மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது, கோஷங்களை எழுப்புவது அல்லது பிற அரசியல் செய்திகளை விவாதிப்பது போன்றவை கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதேபோல் கடந்த வாரம் ஜனநாயகம் தொடர்பான புத்தகங்கள் பொது நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் அது போன்ற புத்தகங்கள் புதிய சட்டத்தை மீறுகிறதா என்பது குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.