தடுப்பூசிகளை தயாரிப்பதில் அமெரிக்கா மிக வேகமாக பணியாற்றி வருவதாகவும், விரைவில் ஒரு நல்ல செய்தி கேட்போம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  உலகில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனாவுக்கு எதிராக சிறப்பான முறையில் பணியாற்றி வருவதுடன், சோதனைகளை அதிகப்படுத்திவருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, 1 கோடியே 32 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 76 ஆயிரத்து 285 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 77 லட்சத்து 7,191 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் வைரஸ் பாதிப்பில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. 

 

அமெரிக்காவில் இதுவரை 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரசால் அங்கு 1,38,273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை அமெரிக்காவில் சுமார் 15 லட்சத்து 49 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இது மொத்த நோய் தொற்றுகளில் 44 சதவீதமாகும், 17 லட்சத்து 96 ஆயிரம் பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இது மொத்த நோய்த்தொற்றுகளில் 52% ஆகும் அமெரிக்காவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா மற்ற நாடுகளை விட கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கிறது, குறிப்பாக ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற பெரிய நாடுகளைவிட covid-19 தொடர்பான பரிசோதனைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் சோதனை திட்டம் உலகிலேயே மிகப் பெரியது ஆகும். 

 இதை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் இறப்பு விகிதம் மிகக் குறைவு, இதுவரை நாங்கள் 4.5 கோடி சோதனைகளை நடத்தி உள்ளோம். நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம், வைரஸ் பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறைகளையும் அமெரிக்கா சிறப்பாக செய்து வருகிறது. தடுப்பூசி ஆராய்ச்சியில்  விஞ்ஞானிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், தடுப்பூசிகள் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி கேட்போம் என்று நினைக்கிறேன். மற்ற நாடுகளை விட நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மற்ற நாடுகளில் நோய் பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு வந்த பின்னரே  அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். எனவே அந்த நாடுகளில் நோய் பாதிப்பு வெளியில் தெரியவில்லை. அமெரிக்கா அதிக பரிசோதனைகளை செய்வதால் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தெரிகிறது என தெரிவித்த அவர், சீனா உலகிற்கு என்ன செய்திருக்கிறது என்பதை அனைவரும் பார்க்கிறோம்,  சீனா உலகிற்கு செய்த கொடுமைகளை  நாம் மறந்து விடக்கூடாது.  கொரோனா வைரஸ் சீனா வைரஸ் என்று அழைக்கலாம் எனவும் அவர் கூறினார்.