ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவில் வாகனங்கள் ஓட்டிச் செல்லும்போது இசை எழுப்பும் புதுமையான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஷேக் கலீபா சாலையில் 750 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில், பீத்தோவனின் 9வது சிம்பொனி ஒலிக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியமான நகரமான புஜேராவில், வாகனங்கள் ஓட்டிச் செல்லும்போது இசை எழுப்பும் வகையில் புதுமையான சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே முதல் முறையாகும்.
இதுகுறித்து ஃபுஜேரா நுண்கலை அகாடமியின் பொது இயக்குனர் அலி ஒபைத் அல் ஹபிதி கூறியதாவது: "புஜேரா ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஃபுஜேராவில் உள்ள ஷேக் கலீபா சாலையின் ஆரம்பப் பகுதியில் இருந்து ஃபுஜேரா நீதிமன்றம் வரை 750 மீட்டர் தொலைவுக்கு 'இசை எழுப்பும் சாலை' அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, சாலையில் வெள்ளை நிறத்தில் அடையாளமிடப்பட்ட பட்டை கோடுகளில் காரின் டயர் படும்போது இசை எழும்பும்.
பீத்தோவனின் 9வது சிம்பொனி:
இந்தச் சாலையில் ஒலிக்கும் இசை, புகழ்பெற்ற இசைக் கலைஞர் பீத்தோவனின் 9வது சிம்பொனியாகும். இந்த சிம்பொனி 1804 ஆம் ஆண்டு முதல் 1808 ஆம் ஆண்டு வரை இயற்றப்பட்டது. நாற்பது வயதை நெருங்கும்போது தனது கேட்கும் திறனை முழுமையாக இழந்திருந்த பீத்தோவன், அதன் பின்னரும் தனது பல 'மாஸ்டர் பீஸ்' சிம்பொனிகளை உருவாக்கினார். புகழ்பெற்ற அவரது 9வது சிம்பொனியை மேடையில் அரங்கேற்றியபோது, அவரால் தனது இசையைக் கேட்க முடியாமல் போனது. செவித்திறன் இழந்த நிலையிலும் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். 1770 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பான் பகுதியில் பிறந்த பீத்தோவன் உருவாக்கிய இந்த இசை தற்போது ஃபுஜேராவில் கேட்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுமையும் வளர்ச்சியும்:
இந்த இசை எழுப்பும் சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக, ஃபுஜேராவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாகும். அதை வெளிப்படுத்தும் வகையில் இது ஒரு புதுமையான முயற்சியாக அமையும். இந்தத் திட்டம் ஃபுஜேராவின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.
