கடந்த ஈஸ்டர் தினத்தின்று இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 259 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் தற்கொலைப்படையாக செயல்பட்டது தெரியவந்தது. அதில் இரண்டு  பெண்கம் இருப்பதம் தெரியவந்தது. அவர்களின்  புகைப்படங்களையும் இலங்கை அரசு வெளியிட்டது.

அந்தப் பெண்கள் இருவரும் பர்தா அணிந்து தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் குண்டு வெடிப்பு தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்க  அதிபர் சிறிசேனா  ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும்  இஸ்லாமிய மூத்த தலைவர்கள், மதகுருக்கள் உள்ளிட்டவர்களுடன் அந்நாட்டு அரசு ஆலோசித்து  வந்தது. தீவிரவாத அமைப்புகள் இஸ்லாமிய பெண்களின் உடையான பர்தாவை அணிந்து  போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது, வெடிகுண்டுகளை மறைந்து செல்வது உள்ளிட்ட தங்களது நாசகார செயல்களுக்கு பயன்படுத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து இலங்கையில் பெண்கள் பர்தா அணிவதற்கு இன்று முதல் தடை விதித்து  அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்  தொடர்ந்து பர்தாவுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பா மற்றும் சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கையும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.