வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் 100% பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக வாய்ப்பு இல்லை என பிரெஞ்சு நாட்டு நிபுணர் எச்சரித்துள்ளார். எனவே இன்னும் தீவிரமாக சமூக இடைவெளிகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் 1 கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதுவரை இந்த வைரசுக்கு 5 லட்சத்து 71 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். 76 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வைரசால் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால் அதற்கிடையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை நாடுகள் தீவிரப்படுத்தி இருந்தாலும் அதில்  சொல்லிக்கொள்ளும்அளவிற்கு பலனில்லை. 

எத்தனையோ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும் இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி தீவிரமாக பரவி வருகிறது. ஒரு தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என ஓட்டு மொத்த மருத்துவ உலகமும் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் தடுப்புசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், எனவே  இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு  துவக்கத்தில்  தடுப்பூசி  கண்டுபிடிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தெரிவித்துள்ளார் பிரெஞ்சு நாட்டு நிபுணர், 2021  ஆண்டில் கூட 100% பயனுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசி உருவாக வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். பிரஞ்சு நாட்டின் தொற்றுநோயியல் நிபுணரும், கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது குறித்து அந்நாட்டு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருபவருமான அர்னாட் ஃபோன்டானெட் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்,  நிச்சயமாக 2021 ஆம் ஆண்டில் ஒரு பயனுள்ள தடுப்பூசி உருவாகும் எனில் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். ஓரளவுக்கு கொரோனாவை எதிர்க்கக்கூடிய ஒரு மருந்து இருந்தால்கூட இந்த நெருக்கடியை வெகுவாக சமாளிக்க முடியும் ஆனால் அதற்காக சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. 

அதேபோல், மற்றொரு முழுஅடைப்புக்கு இனி சாத்தியம் இல்லை எனபதால் மக்கள் இந்த வைரசுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோடைக்காலத்தில் சமூக இடைவெளியை நாம் அவசியம் பின்பற்ற வேண்டும், வைரஸ் பரவலுக்கு பெரும் கூட்டங்கள் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று நைஸின் மத்திய தரைக்கடல் ரிசார்ட்டில், ஒரு கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை கான ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். அங்கு சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் அதிக விமர்சனத்திற்கு அந்த நிகழ்ச்சி உள்ளாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பிரபல மருத்துவக்குழு கொரொனாவின் இரண்டாவது அலைகளை தடுக்கும் முயற்சியாக பொது வளாகங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  மேலும் வைரஸ்  பரவல் அதிகம் ஏற்படுவதற்கு   வாய்ப்புள்ள அபாயம் மிக்க பகுதிகளாக, கப்பல்கள், போர்க்கப்பல்கள், விளையாட்டு அரங்குகள்,  டிஸ்கோக்கள், இறைச்சி கூடங்கள், ரிசார்ட்டுகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குமிடங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் போன்ற இடங்கள் அடையாளம்காணப்பட்டுள்ளதாக அர்னாட் ஃபோன்டானெட் தெரிவித்துள்ளார். மேலும் பிரெஞ்சு அரசாங்கம் covid-19 இரண்டாவது அலைக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் நாடு தழுவிய அளவில் மற்றொரு  முழு அடைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை கையிலெடுக்க  அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.