பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியட்நாம் சென்றடைந்தபோது, அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அவரை கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியட்நாம் சென்றடைந்தபோது, அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அவரை கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மேக்ரான் தம்பதியினர் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேக்ரான் கன்னத்தில் அறை?
விமானத்தின் கதவு திறக்கப்பட்டவுடன், மேக்ரான் வெளியில் வரும்போது, ஒரு சிவப்பு நிற கை அவரது முகத்தை லேசாக தள்ளுவது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது. சில நொடிகளுக்குப் பிறகு, அதே நிற உடையில் பிரிஜிட் மேக்ரான் தோன்றுகிறார். இது அதிபரை அவரது மனைவி அறைந்தது போல் தோற்றமளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பிரான்ஸ் அதிபரின் அலுவலகம் முதலில் வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. பின்னர் அது உண்மையானது என ஒப்புக்கொண்டது. இருப்பினும், இது தம்பதியினருக்கு இடையே நடந்த ஒரு "வேடிக்கையான சண்டை" என்று அதிபரின் அலுவலக வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
ரஷ்யாவின் சதியா?
அதிபர் மேக்ரானின் உதவியாளர் ஒருவர், "பயணம் தொடங்கும் முன் அதிபரும் அவரது மனைவியும் சற்று ஓய்வெடுத்தனர். வீடியோவில் இருப்பது அந்தத் தருணம்தான்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பரவியதற்கு, காரணம் சமூக வலைத்தளங்களில் உள்ள ரஷ்ய ஆதரவு கணக்குகள்தான் என்றும் சில அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குறுகிய வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மேக்ரானை விமர்சிக்கும் சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
மேக்ரானின் பயணம்:
மேக்ரான் தனது வியட்நாம் சுற்றுப்பயணத்தில், அதிகரித்து வரும் அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கத்திற்கு மத்தியில் பிரான்ஸை ஒரு நம்பகமான மூலோபாய பங்காளியாக முன்வைக்க இருப்பதாக அந்நாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன. வியட்நாம் பயணத்தைத் தொடர்ந்து அவர் இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
