கொரோனா சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ்.. ஆதாரத்துடன் வெளிப்படுத்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி
கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது இல்லை; சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் உருவானது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மோண்டேக்னெர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் 210 நாடுகளில் பரவி, மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழ்வதுடன், பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகையே பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்த சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இது இயற்கையாக உருவானது அல்ல; சீனர்களால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்து தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. வூஹானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானதாக வெளியான தகவலை அடுத்து, அந்த சந்தை இன்றுவரை மூடிக்கிடக்கிறது.
அதேநேரத்தில், கொரோனா அதுவாக உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வியும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா அல்லது விபத்தாக பரவிவிட்டதாக என்பன போன்ற பல சந்தேகங்கள் உள்ளன.
கொரோனாவை தடுக்க சீனா சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பும் உள்நோக்கத்துடன் தடுப்பு பணிகளை சரியாக செய்யவில்லையென்றும், கொரோனா பாதிப்பு, இறப்பு குறித்த எண்ணிக்கையில் பொய்யான தகவல்களை வழங்கிவருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட பெரிய வல்லரசு நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன.
இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அந்த வைரஸ் உருவான விதம் குறித்த சந்தேகமும் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஃப்ரெஞ்ச் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி லூக் மாண்டேக்னெர், சீனா 2000ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே வூஹானில் உள்ள உயிரியல் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அங்கு எய்ட்ஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அங்கு கடந்த பல ஆண்டுகளாக கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது. எனவே அங்கிருந்து தான் கொரோனா பரவியிருக்கும் என்று லூக் தெரிவித்துள்ளார்.