பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான விமானம், மால்டா நாட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 

மத்திய தரைக்கடல் பகுதியில் மால்டா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள வெலிட்டா நகரில் இருந்து நேற்று காலை பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான விமானம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. 

இந்த விமானத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுங்க வரித்துறை அதிகாரிகள், விமானி என 5 பேர் இருந்தனர். லிபியா கடற்கரையில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். மேலும், இந்த கடற்கரையில் போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது. இதைத் தடுக்க பிரான்ஸ் அரசு, மால்டா நாட்டில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்காக அந்நாட்டின் வெலிட்டா நகர விமான ஓடுதளத்தையும் பயன்படுத்தி வருகிறது. 

அதன்படி, நேற்று காலை ஒரு சிறிய விமானத்தில் பிரான்ஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணிக்காக புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்ததும் கடுமையான தீப்பிளம்பு ஏற்பட்டு கொளுந்து விட்டு எரிந்தது. 

இந்த விபத்து ஏற்பட்டதும் மால்டா நாட்டு தீயணைப்பு படையினர், மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பலியானார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் வெலிட்டா விமான நிலையம் 4 மணி நேரம் மூடப்பட்டது.