அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுள்ளது. அவர் விரைவில் குணமடைய அதிபர் டிரம்ப், கமலா ஹாரிஸ், பராக் ஒபாமா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Joe Biden diagnosed with prostate cancer: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அவரது எலும்புகளுக்கு பரவியுள்ளது என்று பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கட்சி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

82 வயதான ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு வெளியே அதிகமாக தலை காட்டவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், புரோஸ்டேட் புற்றுநோய் அற்குறிகள் இருப்பது தென்பட்டது. இப்போது மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய்

ஜோ பைடனுக்கு ஏற்பட்ட புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என டாக்டர்கள் கூறியுள்ளனர். இது நோயின் தீவிரத்தைக் குறிக்கிறது. ஜோ பைடனும், அவரது குடும்பத்தினரும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து அவரது மருத்துவர்களுடன் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். ஜோ பைடனின் மகனான பியூ பைடனும் கடந்த 2015ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் தான் இறந்தார்.

அமெரிக்காவில் அதிகம் பரவும் புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும், அமெரிக்காவில் எட்டு ஆண்களில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் இது கண்டறியப்படுவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் இது மிகவும் சிகிச்சையளிக்கக்கூடியது என்றாலும், ஆண்களில் புற்றுநோய் இறப்புக்கு இது இரண்டாவது முக்கிய காரணமாகும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜோ பைடன் குணமடைய டிரம்ப் வாழ்த்து

ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது அறிந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும் வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்றார். இதேபோல் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரான கமலா ஹாரிசும் பைடன் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் குணமடைய கமலா ஹாரிஸ், ஒபாமா வாழ்த்து

''ஜோ பைடன் வாழ்க்கையையும் தலைமையையும் எப்போதும் வரையறுத்துள்ள அதே வலிமை, மீள்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் அவர் இந்த சவாலை எதிர்கொள்வார் என்பது எனக்குத் தெரியும். முழுமையான மற்றும் விரைவான மீட்சிக்கான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார். மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ''மிச்செல்லும் நானும் முழு பைடன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம். 

புற்றுநோய்க்கான அனைத்து வடிவங்களிலும் திருப்புமுனை சிகிச்சைகளைக் கண்டுபிடிக்க ஜோ பைடனை விட வேறு யாரும் அதிகம் செய்யவில்லை. மேலும் அவர் தனது தனித்துவமான உறுதியுடனும் கருணையுடனும் இந்த சவாலை எதிர்த்துப் போராடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.