"புடின் புத்திசாலி.. ஜோபிடன் ஒரு. .?" நான் அதிபராக இருந்திருக்கனும்..! சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் !!
முக்கிய நகரங்களை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளது. தலைநகர் கிவ்வில் ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வை கைப்பற்றி விட்டதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் உக்ரைன் மறுத்து உள்ளது. அந்த நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது. இன்று 5-வது நாளாக முக்கிய நகரங்களை குறி வைத்து குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகள் மூலமும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது.
இதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து உக்ரைனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.ரஷிய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். போலந்து, ருமேனியா, அங்கேரி, மால்டோவா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அவர்கள் அகதிகளாக சென்று உள்ளனர். இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளனர்.
போர் தீவிரமடையும் போது மேலும் 40 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என ஐ.நா. தெரிவித்து உள்ளது. மேலும் மக்கள் பதுங்கு குழிகளில் பதுங்கியும் தங்களை பாதுகாத்து வருகிறார்கள். ரஷிய படையின் ஆக்ரோஷமான தாக்குதலால் தலைநகர் கிவ் நகரம் விரைவில் வீழ்ந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்கள் கடுமையாக போரிட்டனர்.
இதனால் ரஷிய படைகள் கடும் சவாலை சந்தித்தது. நான்குபுறத்திலும் சுற்றி வளைத்து ரஷிய வீரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தபோரில் 4,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கைதிகளாக பிடித்து உள்ளதாகவும், ரஷியாவின் 706 ராணுவ வாகனங்கள், 146 பீரங்கிகள், 27 விமானங்கள் உக்ரைன் படையினரால் தகர்க்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு இருக்கிறார். ‘புதின் ‘மிடுக்கானவர்’ என்பதில் பிரச்சினை இல்லை. அவர் உண்மையில் மிடுக்கானவர்தான். அமெரிக்க தலைவர்கள் ஊமையாக இருந்ததுதான் பிரச்சினை. அவர்கள் புதினை இந்த அளவுக்கு செல்ல அனுமதித்து விட்டனர். அதே சமயத்தில், உக்ரைன் அதிபர் துணிச்சலானவர்.
நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரேன் இடையே இந்த பயங்கர நெருக்கடி ஒரு போதும் எழுந்து இருக்காது என்று கூறினார். மேலும் புடின் புத்திசாலி’ என்றும் அவர் நிச்சயமாக இந்த பிரச்சனையை எளிமையாக கையாள்வார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.