பிரதமர் மோடிக்கு ஃபிஜி, பப்புவா நியூ கினியா நாடுகள் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிப்பு!!
பிரதமர் மோடிக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருதை அந்த நாட்டின் பிரதமர் சிதிவேணி ரபுகா வழங்கினார்.
உலக நாடுகளின் தலைவராக திகழ்வதற்கும், உலக நாடுகளை ஒருங்கிணைப்பதற்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது மோடிக்கு அரிய விருதாக அமைந்துள்ளது. பெரும்பாலும் ஃபிஜி நாட்டைச் சேராதவர்களுக்கு இந்த விருது வழங்கப்படாது.
பிரதமர் மோடிக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டு இருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், ''இந்தியாவுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. அந்த நாட்டின் பிரதமரால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகத் தலைவராக அடையாளம் காணப்பட்டு இருப்பதற்காக இந்த விருது கிடைத்துள்ளது. மிகச் சிலருக்கே இந்த விருதை ஃபிஜி வழங்கியுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விருதை இந்தியா மற்றும் ஃபிஜி நாட்டில் வாழும் இந்திய வம்சா வழி மக்களுக்கு வழங்கி கவுரவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாகவும், இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படுவதற்கு முக்கிய நபராக பிரதமர் இருந்தார் என்றும் வெளியுறவு விவகாரத்துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
ஃபிஜி நாட்டின் பிரதமர் சிதிவேணி ரபுகா சந்திப்புக்குப் பின்னர் மோடி தனது டுவிட்டரில், ''ஃபிஜி நாட்டின் பிரதமரை சந்தித்ததில் சந்தோசம் அடைகிறேன். பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற இணைந்து செயல்படுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அந்த நாட்டில் நடக்கும் 14 பசிபிக் தீபகற்ப நாடுகள் பங்கேற்கும் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு (FIPIC) உச்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டுள்ளார். இந்த நாடுகளுடன் பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை மேற்கொள்வதே முக்கிய நோக்கமாகும் என்று இந்தியா தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிஜி நாட்டைப் போல பப்புவா நியூ கினியாவும் தனது உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளது. பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியா விருது வழங்கியது.