இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: மகளின் உடலை கண்டறிய ஆப்பிள் வாட்சை பயன்படுத்திய தந்தை!
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது மகளின் உடலை ஆப்பிள் வாட்ச், செல்போனில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது தந்தை கண்டறிந்துள்ளார்
பாலஸ்தீன பிராந்தியமான காசாவின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்த அந்த நாளில் தெற்கு இஸ்ரேலில் உள்ள கிப்புட்ஸ் ரெய்மில் நடந்த சூப்பர்நோவா சுக்கோட் இசை விழாவிலும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், நோவா இசை விழாவில் ஹமாஸ் குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய-அமெரிக்க பெண்ணின் சடலத்தை அவரது ஆப்பிள் வாட்ச் மற்றும் செல்போனின் கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி கண்டறிந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
கணினி நெட்வொர்க் தயாரிப்புகளின் பன்னாட்டு சப்ளையரான மெலானக்ஸ் நிறுவனரும், தொழிலதிபருமான ஏல் வால்ட்மேன் என்பவரது 24 வயதான பெண் டேனியலும் கலந்து கொண்டார். முதலில், தனது மகள் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவே அவர் நினைத்துள்ளார். ஆனால், ஹமாஸ் அமைப்பால் தனது மகள் மற்றும் அவரது காதலன் நோம் ஷாய் ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டது அக்டோபர் 11ஆம் தேதியன்று அவருக்கு தெரியவந்துள்ளது.
“நான் இஸ்ரேலில் தரையிறங்கிய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, தெற்கு பக்கம் சென்றேன். அவர்கள் சென்ற காரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. சில பொருட்களையும் கண்டுபிடித்தோம். கிராஷ் கால் அம்சம் கொண்ட அவரது செல்போனில் இருந்து எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. அதனை வைத்து அவர்கள் சென்ற காரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது.” என ஏல் வால்ட்மேன் தெரிவித்துள்ளார்.
ஹமாஸால் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களது கார் தாக்கப்பட்டிருக்கும் என நிலைமையை அவர் விவரித்தார். “குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நபர்களால் இரண்டு திசைகளில் இருந்தும் எனது மகள் எப்படி கொல்லப்பட்டிருப்பார் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. எங்கிருந்த குண்டுகளை பார்த்தால், காரை நோக்கி குறைந்தது மூன்று துப்பாக்கிகளாவது சுட்டிருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் வெளியிட்ட முதல் இஸ்ரேல் பெண் பணயக்கைதி வீடியோ!
மேலும், தனது மகள் டேனியல், அவரது காதலன் மற்றும் திருவிழாவில் கலந்து கொண்ட இரண்டு அல்லது மூன்று இளைஞர்கள் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து தப்பிக்க வெள்ளை டொயோட்டா கார் ஒன்றில் குதித்தாகவும், இருப்பினும், துப்பாக்கிக் குண்டுகளுக்கு அவர்கள் இரையாகி விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “கடைசியாக டேனியலுடன் பேசியபோது, விரைவில் அவரது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும், மோசமான நிகழ்வுகளால் இப்போது அவர்கள் ஒன்றாக புதைக்கப்படுவார்கள். அவளை சந்தித்த ஒவ்வொருவரும் அவளை நேசித்தனர். அவள் எந்தத் தவறும் செய்யவில்லை, யாருக்கும் தீமையும் செய்யவில்லை.” என்று கண்களில் கண்ணீர் நிரம்ப வால்ட்மேன் கூறுகிறார்.
உயிரிழந்த டேனியல் மற்றும் நோம் சமீபத்தில் தங்கள் நாயுடன் ஒரு புதிய குடியிருப்பில் குடியேறினர். அவர்கள் ஒரு சில வாரங்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தனர். விரைவில் அவர்கள் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.