பின்லாந்தில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த பெண் நேரலையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். பிரிட்டனில் இருந்த அவரது நண்பர் இந்த சம்பவத்தை நேரடியாகக் கண்டார். கொலையாளி பின்னர் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்லாந்தில், ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெண், நேரலையில் (live stream) குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருந்த அவரது நண்பர், இந்த கொடூர சம்பவத்தை நேரடியாகக் கண்டார்.
விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, 32 வயதான அந்த பின்லாந்துப் பெண், பிரிட்டனில் உள்ள தனது நண்பருடன் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆன்லைன் கேம்களை விளையாடி வந்துள்ளார். ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், பின்லாந்தில் உள்ள புமலா (Puumala) என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு ஜன்னல் உடைக்கப்படும் சத்தம் திடீரெனக் கேட்டுள்ளது.
கண்முன்னே நடந்த கொலை
இதை அடுத்து, பிரிட்டனில் இருந்த அவரது நண்பர், பின்லாந்துப் பெண்ணிடம் கதவைப் பூட்டிவிட்டாயா என்று கேட்டுள்ளார். ஆனால், சில நிமிடங்களில், ஒரு அந்நியர் அவளிடம் பின்னிஷ் மொழியில் பேசுவது கேட்டுள்ளது. சிறிது நேரத்தில், அக்கம் பக்கத்தினர் கூச்சலிடும் சத்தத்தையும் கேட்டிருக்கிறார்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்ததால், உடனடியாக தன்னால் உதவ முடியவில்லை என அந்த பிரிட்டன் நண்பர் பின்லாந்து காவல்துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண் தனது வீட்டில் சடலமாகக் கிடப்பதைக் கண்டனர்.
கொலையாளி தற்கொலை
குத்திக் கொலை செய்த நபர், பின்னர் சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஜுவா (Juva) என்ற இடத்திற்குச் சென்று, ஒரு கொட்டகைக்கு தீ வைத்துள்ளார். பின், அவர் அந்தத் தீயிலிருந்து வெளியே வந்து கீழே சரிந்து விழுந்தாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். பலத்த தீக்காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், கொலையாளிக்கு காவல்துறையுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்ததாலும், எளிதாக நுழையும்படி இருந்ததாலும், அவர் அந்த வீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஆன்லைன் கேமிங் மரணங்கள்
சமீபகாலமாக, ஆன்லைன் கேமிங் மற்றும் லைவ்ஸ்ட்ரீம் விளையாட்டுகளின் போது குற்றச் சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பிரெஞ்சு யூடியூபர் ராஃபேல் கிரேவன் (Raphael Graven) என்பவர், 'கிக்' (Kick) என்ற தளத்தில் லைவ்ஸ்ட்ரீம் செய்துகொண்டிருந்தபோது, பல மணிநேரம் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார். இவர் ஆன்லைன் சேலஞ்ச்களில் பங்கேற்று பிரபலமானவர். லைவ் ஸ்ட்ரீம் செய்தபோது, இரண்டு பேர் அவரைத் தொடர்ந்து தாக்கியதாகவும் அவமானப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
