ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் புதியதாக 'டேட்டிங்' செயலி ஒன்றை கொண்டுவரவுள்ளது. அதற்கான சோதனைப் பணிகள் நடந்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கியமானதாக உள்ள ஃபேஸ்புக்கில், சிறுவர்கள் தொடங்கி பலரும் பயன்படுத்துகின்றனர். இன்றைக்கு ஃபேஸ்புக் பயன்படுத்தாத நபர்களே குறைவு எனும் அளவுக்கு, இதன் வளர்ச்சி உள்ளது.
 
இவ்வாறு ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பலர், காதல், காமம் போன்ற தங்களின் அந்தரங்க செயல்களுக்கும் அதிகம் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் அறிமுகமான டிண்டர் என்கிற ஆப், இளசுகள் முதல் பெருசுகள் வரை பலரை கவர்ந்தது. டேட்டிங் ஆப் என்று அழைக்கப்படும் டிண்டருக்கு பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களை மனதில் வைத்து, ஃபேஸ்புக் நிறுவனம், புதியதாக டேட்டிங் செயலி ஒன்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 
 
இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் 'ஆப்ஸ்' மென்பொருள் உருவாக்கும் ஜானே மன் ஷுன் வாங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " அமெரிக்காவில் இயங்கும் பேஸ்புக் தலைமை அலுவலக ஊழியர்கள் மத்தியில் புதியதாக சோதனை ஒன்று நடைபெறுகிறது. அதாவது டேட்டிங் ஆப்ஸ் ஒன்றை விரைவில் பேஸ்புக் சமூக வலைதள உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் முன்னோட்டமாக, முதலில் பேஸ்புக் ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் டேட்டிங் ஆப்ஸ் நடைமுறையில் உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புதிய ஆப்ஸ் குறித்து பேஸ்புக் நிறுவனம், அலுவலக ஊழியர்கள் யாரும் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி சக ஊழியர்களுடன் டேட்டிங் செய்ய முயல வேண்டாம் என்று அமெரிக்க ஊழியர்கள் மத்தியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப்புதிய ஆப்ஸ் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் கூறுகையில், " இது குறுகியகால நட்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. நீண்டகால அடிப்படையில் உறவுகளை கட்டமைக்கும் வகையில் பேஸ்புக் பயனாளர்களுக்கு கொண்டுவரப்படவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
  
மேலும் அவர் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் பாதுகாக்கப்படும் வகையில் இந்த  புதிய ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் வாடிக்கையாளர்கள் ஒரு புதிய ஆப்ஸ் வசதியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை கோர்த்துவிடும் புரோக்ககர் வேலையில் பேஸ்புக் ஈடுபட உள்ளது.