இந்தியர்களை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம்... உறுதி அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்!!
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும் என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல் உறுதி அளித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும் என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல் உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் கங்கா திட்டத்தில் பயணிகள் விமானத்துடன் விமானப்படை விமானங்களையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்களை விரைந்து மீட்பதற்காக விமானப்படை விமானங்களை பயன்படுத்த பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே உக்ரைனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும் என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல் உறுதி அளித்துள்ளார். இதுக்குறித்து ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல் பிரதமர் மோடி உடன் தொலைப்பேசியில் பேசுகையில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும் என உறுதி அளித்தார்.