3000 கி.மீ. பறந்து வந்தும் கால்பந்து போட்டியைப் பார்க்காமலே திரும்பிய ரசிகர்...!
கால்பந்து போட்டியைக் காண 3000 கி.மீ பறந்து வந்தும் டிக்கெட்டை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்ததால், போட்டியைக் காணாமலேயே ரசிகர் ஒருவர்
திரும்பி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
உலக கால்பந்து தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டியைக் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர். இந்த
நிலையில், இங்கிலாந்து அணியின் தீவிர ரசிகர் ஒருவர், தான் வாங்கிய டிக்கெட்டை, வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு 3000 கிலோ மீட்டர் பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் தீவிர ரசிகரான டக்ளஸ் மோரிடன், பிரிஸ்டோல் நகரில் வசித்து வருகிறார். இவர் இந்த உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து பனாமா
அணிகள் மோதும் போட்டியை நேரில் காண டிக்கெட் வாங்கியிருந்தார்.
அதன் பின்னர் போட்டியைக் காண ரஷ்யா வந்துவிட்டார். சுமார் 3000 கி.மீ பயணம் செய்து போட்டி நடக்கும் நகருக்கு வந்த பிறகுதான் அவருக்கு, தான்
போட்டிக்கான டிக்கெட்டை எடுக்காமல் வந்துவிட்டோம் என்று தெரிந்தது. இதனால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவர், தன்னுடன் தங்கியிருந்தவரான டேன் ஹொவெல்ஸ் உதவியை நாடினார்.
டேனும், இது தொடர்பாக டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில், இந்த போட்டியைக் காண டக்ளஸ் பிரிஸ்டோலில் இருந்து வந்துள்ளார். ஆனால், வாங்கிய டிக்கெட்டை தனது வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டார். யாரிடமாவது கூடுதல் டிக்கெட் இருந்தால் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், டக்ளஸ் மோரிடனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. டக்ளஸை டேனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக டேன் மற்றொரு டுவிட்
செய்திருந்தார். அதில், டேன், டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால், இப்போது அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அவரைப் பார்த்தால் ஓட்டல்
வரவேற்பு அறையை அணுகச் சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், டக்ளஸ், கடைசிவரை அங்கு வரவில்லை. இதனால் இங்கிலாந்து - பனாமா இடையே நடந்த கால்பந்து போட்டியை அவரால் பார்க்க முடியாமலேயே
போய்விட்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.