#UnmaskingChina:இந்திய- சீன எல்லை விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்..!! அமெரிக்கா பாணியில் இங்கிலாந்து
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அதிரடியாக கருத்து கூறியுள்ளார், அதில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா- சீனாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய சூழ்நிலை என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் முதல்முறையாக அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய-சீன எல்லையில் இருநாட்டுக்கும் இடையே கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இருநாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. தற்போது இங்கிலாந்தும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிவரும் நிலையில் இந்தியா சீனா, பாகிஸ்தான், என்ற எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறது. எல்லையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா மீது ஆற்றாமையில் இருந்து வந்த சீனா, கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீன எல்லைக்குள் அத்துமீறியதாக கூறி எல்லையில் தன் ராணுவத்தை குவித்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன்-15 ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்தது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் கூடதலாக படைகளை குவித்து வருவதால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சுழல் இருந்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அதிரடியாக கருத்து கூறியுள்ளார், அதில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருப்பது மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய சூழ்நிலை என அவர் கருத்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் உறுப்பினரும் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஒருபுறம், ஜனநாயகம் பற்றிய நமது கருத்தை சவால் செய்யும் அரசு மற்றொருபுறம், என இந்த இரண்டு மிகப்பெரிய நாடுகளுக்கு இடையேயான மோதலில் பிரிட்டிஷ் நலன்கள் மற்றும் அதில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஃபிளிக் டிரம்மண்டுக் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், கிழக்கு லடாக் பிரச்சனை மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய சூழ்நிலை, இதை இங்கிலாந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த விஷயத்தில் நான் சொல்லுகின்ற ஒரு மிகச் சிறந்த வழி என்னவென்றால், இரு தரப்பினரும் எல்லையில் உள்ள பிரச்சினைகள் குறித்து உரையாடலில் ஈடுபடவேண்டும். அவர்களின் பேச்சுவார்த்தைகளை ஒழுங்குபடுத்தவும், அதை ஊக்குவிக்கவும் இங்கிலாந்து தயாராக உள்ளது எனவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.