பெட்ரோல் வாங்க பணம் இல்லாமல் இலங்கை தவிப்பு..பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டாம்-இலங்கை அரசு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அன்னிய செலவானி இல்லாத காரணத்தால் பெட்ரோல் கப்பலுக்கு பணம் கூட கொடுக்க முடியாத நிலையில் இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
பெட்ரோல் கப்பலுக்கு பணம் கொடுக்க முடியவில்லை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்றபட்டதன் காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். விலைவாசியும் பல மடங்கு உயர்ந்ததால் உணவு சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கையில் தற்போது உள்ள நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா பாராளுமன்றத்தில் பேசுகையில், கடந்த ஜனவரியில், இலங்கைக்கு பெட்ரோலியப் பொருட்களை அளித்த நிறுவனத்துக்கு 408 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக தெரிவித்தார். அதே நிறுவனத்தின் பெட்ரோலை ஏற்றி வந்த கப்பல், இலங்கை கடல் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக நிற்கிறது. 'பழைய தொகையுடன், தற்போது ஏற்றி வந்துள்ள பெட்ரோலுக்கும் சேர்த்து பணம் கொடுத்தால் மட்டுமே, பெட்ரோலை இறக்கி செல்வோம்' என, கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
பெட்ரோல் இல்லை- காத்திருக்க வேண்டாம்
பழைய தொகையை அளிக்க இலங்கை மத்திய வங்கி உறுதி அளித்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர், எனவே தற்போது பெட்ரோல் கையிருப்பு இல்லாத காரணத்தால் இலங்கை மக்கள் பெட்ரோல் பங்குகளுக்கு முன் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு நாட்களில் பெட்ரோல் வந்துவிடும் எனவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ஜூன் மாதத்திற்கான இலங்கையின் எரிபொருள் தேவை 530 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 'இலங்கை அரசுக்கு 1,232 கோடி ரூபாய் கடன் உதவியை உலக வங்கி அளித்துள்ளது. உலக வங்கியிடம் இருந்து பெறும் தொகையை எரிபொருள் வாங்க பயன்படுத்த முடியாது.''இதில் ஒரு பகுதியை எரிபொருள் வாங்க பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.