ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி நெருங்கும் தருவாயில் உள்ளதாக ஐரோப்பிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி நெருங்கும் தருவாயில் உள்ளதாக ஐரோப்பிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹான்ஸ் க்ளூக் கூறுகையில், ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்றின் ஆட்டம் முடிவுக்கு வரவிருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 60 சதவீதம் பேரை ஒமைக்ரான் தாக்கிவிடும். ஒமைக்ரான் அலை தணிந்தவுடன் சில காலம் பேரமைதி நிலவும். அதற்கு காரணம் தடுப்பூசி அளிக்கும் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லையெனில் பெரும்பாலான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு மீண்டதால் உருவான மந்தை நோய் தடுப்பாற்றலாக இருக்கலாம். அதன் பின்னர் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.

இந்த ஆண்டு கடைசி வரை வேறு எந்த வகை தொற்று பாதிப்பும் இருக்காது. இருப்பினும், இப்போதே நாம் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் குறிப்பிட்ட காலகட்டத்தில் பரவும் பருவநோய் என்ற நிலைக்கு வந்துவிட்டதாகக் கருதி அலட்சியமாக இருக்கக் கூடாது. இப்போது தான் நாம் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். ஒரு உலகளாவிய பெருந்தொற்று பருவகால நோய் என்ற நிலைக்கு வருகிறது என்றால் அந்த நோயின் போக்கை நாம் கணித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே அதன் அர்த்தம். அலட்சியமாக இருந்துவிட கூடாது. கொரோனா வைரஸ் நம்மை நிறைய முறை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகையால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் மொத்தமாக 53 நாடுகள் உள்ளன. இவற்றில் சில மத்திய ஆசிய நாடுகளும் அடங்கும். ஜனவரி 18 ஆம் தேதி கணக்கின்படி ஐரோப்பியாவில் பதிவான புதிய தொற்றுகளில் 15 சதவீத தொற்று ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டவை. தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அரசுகள் தங்களின் கவனத்தை தொற்றுப் பரவல் தடுப்பில் காட்டுவதைவிட, மருத்துவமனை தேவைகளைக் குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடுவதைக் கட்டுப்படுத்துவது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.