தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை..’பல்டி’ அடித்த தேர்தல் ஆணையம்..அப்செட்டில் இம்ரான் கான்.!!
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசியல் - குழப்பம் :
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான், அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டார்.
அத்துடன் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பார் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்திருந்தார். இடைக்கால பிரதமருக்கான பெயர்களை பரிந்துரை செய்யும்படி பிரதமர் இம்ரான்கான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு அதிபர் கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.
90 நாட்களுக்குள் தேர்தல் :
இந்நிலையில் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
இம்ரான் கான் கேள்வி :
இதுபற்றி பேசிய இம்ரான் கான், ‘முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறது என்று புரியவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலை கண்டு அச்சம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னரும் எதிர்க்கட்சிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என புரியவில்லை.
எங்கள் அரசு தோல்வியடைந்ததாகவும் மக்களின் ஆதரவை இழந்ததாகவும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இவர்கள் தேர்தலைக் கண்டு அஞ்சுவது ஏன்? ஜனநாயகத்தை நம்பும் கட்சிகள் ஆதரவு கேட்டு மக்களிடம் தான் செல்வார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இன்னும் 3 மாதத்துக்குள் பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று இம்ரான் கான் அறிவித்து உள்ளார். இதனை முற்றிலும் மறுக்க கூடிய வகையில், 3 மாதங்களில் தேர்தல் சாத்தியமில்லை என்று இம்ரான் கானுக்கு பதில் கொடுத்துள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம். அடுத்து என்ன நடக்கும் ? என்று பரபரப்பாக இருக்கும் பாகிஸ்தான் அரசியல் சூழலில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.