வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட டிரம்ப்; கனடாவை பகைத்தால் அமெரிக்காவுக்கு இவ்வளவு பாதிப்புகளா?
கனடா பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இது அமெரிக்காவுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா-கனடா வர்த்தகப்போர்
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்றது முதலே டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாட்டவர்கள் அமெரிக்கா குடியுரிமை பெற கட்டுப்பாடுகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை, அகதிகள் நுழைய தடை என அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
இந்த வரிசையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் கனடா மற்றும் மெக்ஸிகோ இறக்குமதி பொருட்கள் மீது 25% வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவிற்கு கனடா தேவையில்லை என்று வார்த்தையை விட்டதால் அமெரிக்கா-கனடா இடையே வர்த்தகப்போர் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு தான் பாதிப்பு
கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ டிரம்புக்கு சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார். ''அமெரிக்கா கனடா பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்தால், நாங்கள் கண்டிப்பாக பதில் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்க மக்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து விலைகள் உயரும். இதை டிரம்ப் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்'' என்றார்.
கனடாவை பகைத்தால் அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் அண்டை நாடுகளாக கனடாவும், மெக்சிகோவும் உள்ளன. அமெரிக்காவிற்கு கனடா தேவையில்லை என்று டிரம்ப் கூறினாலும், அமெரிக்கா ஒரு நாளைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கிட்டத்தட்ட கால் பங்கு எண்ணெய் கனடாவில் இருந்து தான் வருகிறது.
என்ன பாதிப்பு?
எண்ணெய் மட்டுமின்றி எஃகு, அலுமினியம் மற்றும் யுரேனியம் 34 முக்கியமான கனிமங்களுக்கு அமெரிக்கா கனடாவை தான் சார்ந்து இருக்கிறது. ஆகவே டிரம்ப் கனடா பொருட்களுக்கு அதிக வரிகள் விதித்தால் ஆட்டோமொபைல்கள், மரம் வெட்டுதல் தொழில் மற்றும் எண்ணெய் சந்தைகளின் விலைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது அமெரிக்கா மக்களை நேரடியாக பாதிக்கும்.
இது மட்டுமின்றி டிரம்ப் கனடா மீது நடவடிக்கை எடுத்தால், அமெரிக்காவின் ஆரஞ்சு பழச்சாறு, கழிப்பறை பொருட்கள் மற்றும் சில எஃகு பொருட்கள் மீது கனடா அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது. டிரம்ப் கனடாவை எதிர்ப்பது இது முதன்முறையல்ல. தனது முந்தைய ஆட்சிக் காலத்திலும் கனடாவின் எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்கா பொருட்களுக்கு கனடா வரி விதித்தது.
கனடாவை விட்டு ஒதுங்க முடியாது
டொனால்ட் டிரம்ப் கனடாவை ஒதுக்கினாலும், அமெரிக்காவால் கனடாவை விட்டு ஒதுங்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 3.6 பில்லியன் கனேடிய டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் அமெரிக்க-கனடா எல்லையைக் கடந்து செல்கின்றன. அமெரிக்காவுக்கு சீனவை அடுத்து உலகின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக கனடா தான் உள்ளது.
கனடாவில் இருந்து அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வருவதும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வருவதும் டொனால்ட் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை. இதனால் தான் அவர் கனடா மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும், அந்த நாட்டை இனிமேல் சார்ந்திருக்க வேண்டிய நிலை வேண்டாம் என நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி
ஆனால் ''கனடா பொருட்கள் மீது அதிக வரி விதித்தால் அது கனடாவுக்கு பாதிப்பு தான். அதே வேளையில் அமெரிக்காவுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவிற்குள் செல்லும் சட்டவிரோத போதைப்பொருட்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதும், அமெரிக்காவிற்குள் செல்லும் புலம்பெயர்ந்தோரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதும் கனடாவிலிருந்து செல்கிறார்கள் என்பதை அறிவோம். இதை தடுக்க ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்து எங்கள் எல்லையை வலுப்படுத்துகிறோம்'' என்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு பதில் கூறியுள்ளார்.