இந்த ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு, அமெரிக்காவின் ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் மற்றும் பிரிட்டனின் பிலிப் அகியோன் ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பப் புதுமையின் பங்கை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியைத் தெளிவுபடுத்தியமைக்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று நிபுணர்களுக்கு கூட்டாக வழங்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசுகள், ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆறு பிரிவுகளில் (மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி) வழங்கப்படுகின்றன.

வழக்கம் போல், இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகளுக்கு உரியவர்களின் பெயர்கள் கடந்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

பொருளாதாரத்திற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, ஜோயல் மோகிர் (Joel Mokyr), பிலிப் அகியோன் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt) ஆகிய மூன்று நிபுணர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. ஜோயல் மோகிர் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பிலிப் அகியோன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த மூவரும், புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியைத் தெளிவுப்படுத்தியமைக்காக இந்த கவுரவத்தைப் பெறுகின்றனர். பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பப் புதுமைகளின் முக்கியப் பங்கைப் பற்றிய இவர்களின் ஆழமான ஆய்வுகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.