வங்கதேசத்தில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் சக்திவாய்ந்த அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர்.

கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பீதியுடன் வெளியேறினர்.

வங்கதேசத்தில் நிலநடுக்கம்

வங்கதேசத்தின் கோரஷால் (Ghorashal) பகுதிக்கு அருகில் காலை 10:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) கூறியுள்ளது. இதன் மையம் வங்கதேசத்தின் நார்சிங்டியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருந்தது.

இந்த நிலநடுக்க அதிர்வுகளால் வங்கதேசத்தின் டாக்காவில் கட்டிடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். சில இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்கள் சரிந்து விழுந்தன.

மேற்கு வங்கத்தின் பெரும்பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. காலை 10:10 மணியளவில் ஏற்பட்ட இந்த அதிர்வுகள் சுமார் 20 விநாடிகள் நீடித்தன.

இந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர் என டாக்கா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 3 பேர் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். கட்டிடங்களின் கூரைகள் சரிந்ததில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூவர் உயிரிந்தனர் என டாக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைத்தளப் பதிவுகள்

சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள பல கொல்கத்தா வாசிகள் நில அதிர்வு சில விநாடிகளே நீடித்தாலும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகக் கூறுகின்றனர். சுப்ரதிம் மைத்ரா என்பவர் தனது எக்ஸ் பதிவில், " நிலநடுக்கம் சிறிது நேரம் இருந்தாலும் பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டது" என்று கூறியுள்ளார்.

வினய் குமார் டொகானியா என்ற மற்றொரு பயனர், "நிலநடுக்கம் 30 விநாடிகளுக்கு மேல் நீடித்தது, மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிர்வு ஏற்பட்டபோது விசிறிகள் மற்றும் சுவரில் பொருத்தப்பட்ட பொருட்கள் ஆடும் காட்சிகளையும் பலர் பகிர்ந்துள்ளனர்.

இந்த நில அதிர்வுகளால் இதுவரை எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, இன்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மிதமான அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.