இந்தோனேஷியா அருகே கடும் நிலநடுக்கம்…. சுனாமி அச்சத்தில் பொது மக்கள்!!
இந்தோனேஷியாவின் லம்போக் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது., இதையடுத்து பொது மக்களிடையே சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியா தீவுகளில் உள்ள சுற்றுலா தளம் பாலிக்கு சற்று தொலைவில் இந்த லம்போக் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் மையம் லேலாங்கென் பகுதிக்கு தென்மேற்கே 1.4 கிலோ மீட்டர் தொலைவில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் தொடக்க நிலை எச்சரிக்கை எனப்படும் மஞ்சள் நிற எச்சரிக்கை வெளியிட்டு உள்ளனர். இந்த கடும் நிலநடுக்கத்தினால் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் மற்றும் பின்னர் என சில நிமிடங்களாக நிலஅதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தோனேஷியா தீவு பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆப் ஃபைர் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இது எரிமலைகள் அமைந்த வளைவு பகுதியில் உள்ளதனால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
சுமத்ரா பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர்.