உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் மரணத்துக்குக் காரணமான மருந்துக்குத் தடை
உஸ்பெகிஸ்தானில் இருமலுக்கு மருந்து எடுத்துக்கொண்ட 21 குழந்தைகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த மரியோன் பயோடெக் (Marion Biotech) நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) என்ற மருந்தை குடித்த குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு குற்றம்சாட்டியது.
அந்நாட்டு மருந்துக் கடைகளிலிருந்து டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) மருந்துகளைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்த குற்றச்சாட்டின் எதிரொலியாக, உலக சுகாதார அமைப்பும் மருந்துகளை ஆய்வு செய்யும் குழுவை அமைத்தது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மரியோன் பயோடெக் (Marion Biotech) தயாரித்த AMBRONOL மற்றும் DOK-1 Max ஆகிய இரண்டு மருந்துகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Johnson & Johnson: ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை நீக்கம்
இந்த சிரப்களில் டை எத்திலின் க்ளைகால் அல்லது எத்திலீனின் அளவுக்கு அதிகமாக இருப்பதாக பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றுவரை இந்த சிரப்களைத் தயாரித்த நிறுவனம் அவற்றின் தரத்தைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் இந்தியாவில் தயாரித்த தரமற்ற 4 இருமல் மருந்துகளைக் குடித்த 70 குழந்தைகள் உயிரிழந்தனர் எனப் புகார் எழுந்தது. அந்த மருந்தை இந்தியாவைச் சேர்ந்த மெய்டென் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதுகுறித்தும் உலக சுகாதார அமைப்பும் ஆய்வு செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.