தனியாவே தூங்குங்க.. கிஸ் பண்ணாதீங்க... டிரோனில் கட்டுப்பாட்டு அறிவிப்புகள்.. தினறும் ஷாங்காய் மக்கள்..!
தம்பதியினர் தனித்தனியே உறங்க வேண்டும், முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது, ஒருவரை ஒருவர் கட்டிப்படிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மிக மிக அதிகமாக பரவி வரும் ஷாங்காய் நகரில், கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு, இன்று இரவில் இருந்து தம்பதியினர் தனித்தனியே உறங்க வேண்டும், முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது, ஒருவரை ஒருவர் கட்டிப்படிக்கக் கூடாது என பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற எச்சரிக்கை ஷாங்காய் நகர மக்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தொற்று அதிகரிப்பு:
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஷாங்காய் நகர் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வசித்து வரும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக துவங்கி இருக்கிறது. இதில் அங்கு வசிக்கும் மக்கள் அன்றாட பணிகளை எவ்வாறு மேற்கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.
சீனாவில் ஷாங்காய் நகர் தற்போது கொரோனா வைரஸ் பரவும் முக்கிய ஹாட்ஸ்பாட் ஆகி இருக்கிறது. கடந்த சில நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை ஓரளவு சரிவடைந்து இருக்கிறது. எனினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் தான் இருக்கிறது. இதன் காரணமாக தான் ஷாங்காய் நகர் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஷாங்காய் நகரில் மொத்தம் 2.6 கோடி பேர் வசித்து வருகின்றனர்.
டிரோனில் பறந்து வரும் அறிவிப்புகள்:
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஷாங்காய் நகர மக்களுக்கு டிரோன்களில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக அத்தியாவசிய பொருட்கள் இல்லை என கூறி மக்கள் தங்களது வீட்டின் பால்கனியில் நின்றபடி பாட்டு பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது டுவிட்டர் தளத்திலும் பரவி இருக்கிறது. வீடியோவின் படி ஷாங்காய் நகரில் பறந்து வரும் டிரோன்களில், "சுதந்திரத்திற்கான உங்களின் விருப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்," என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று வெளியான மற்றொரு வீடியோவில், "இன்று இரவு முதல் தம்பதியினர் தனித்தனியே உறங்குங்கள், முத்தம் கொடுத்துக் கொள்ளாதீர்கள், ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொள்ளக் கூடாது. சாப்பிடும் போதும் தனித்தே இருங்கள். உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி," என அறிவிக்கப்பட்டது.
ரோபோக்கள்:
முன்னதாக வெளியான வீடியோக்களில் நான்கு கால்களை கொண்ட ரோபோக்கள், ஷாங்காய் நகர வீதிகளில் வலம் வந்தபடி சுகாதார அறிவிப்புகளை தெரிவித்து வந்தது. தொடர் ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களிடம் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நகர நிர்வாகம் சார்பில் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.