ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் கைகோர்ப்பது டொனால்ட் டிரம்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Donald Trump Worried About China-Russia Relations With India: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொன்டு வருகிறார். தங்கள் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரி விதிக்கும் என்று அவர் தெரிவித்து இருந்தார். ஏற்கெனவே சீனா, கனடா, சில ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக வரி விதித்த டிரம்ப், தனது மிக நெருங்கிய கூட்டாளியான இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. முதலில் இந்திய பொருட்களுக்கு 25% வரி விதித்த அவர் தொடர்ந்து மேலும் 25% வரியை கூடுதலாக விதித்து மொத்தமாக 50% வரி விதித்துள்ளார்.
இந்தியா மீது 50% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்ச எண்ணெய் வாங்குவது டிரம்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்கி ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்வதாகவும் டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.
டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி
மேலும் அமெரிக்காவின் விவசாயப் பொருட்களான சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பால் பொருட்களை இந்திய சந்தையில் இறக்குமதி செய்ய வேண்டும் என டிரம்ப் தொடர்நந்து அழுத்தம் கொடுத்தார். அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால் அதிக வரியை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப்பின் இந்த வரி விதிப்புக்கு இந்தியா அசைந்து கொடுகவில்லை. இந்திய விவசாயிகளின் நலனே நமக்கு முக்கியம். என்ன விலை கொடுத்தாவது நமது விவசாயிகளின் நலன்களை காப்போம் என பிரதமர் மோடி அமெரிக்காவிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து விட்டார்.
இந்தியாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா, சீனா
இப்படி அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக திரும்பி நிற்க, இந்தியாவின் நெருங்கிய நண்பரான ரஷ்யாவும், எதிரி நாடான சீனாவும் இந்தியாவுடன் உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. ரஷ்யாவை பொறுத்தவரை இந்தியாவின் உண்மையான நண்பனாக உள்ளது. கடின காலங்களில் இந்தியாவுக்கு உதவி செய்தது. இந்தியா ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட வர்த்தக உறவுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார். புதின், பிரதமர் மோடி சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பது மட்டுமின்றி டிரம்புக்கு பதிலடி கொடுக்கும்விதமாகவும் அமையப் போகிறது.
புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு
புதின் இந்திய பயணத்துக்கு முன்னதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவில் புதினை சந்தித்து பேசியுள்ளார். புதின் இந்தியாவுக்கு வரவிருப்பதை அஜித் தோவல் இந்த சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சிறப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
புதிதாக மலரும் இந்தியா, சீனா உறவு
இந்தியா, ரஷ்ய உறவு மேலும் வலுப்பெற்று வருவது டிரம்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா, சீனா இடையே புதிய உறவு மலர உள்ளது டிரம்புக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சீனாவுக்குப் பயணம் செய்ய இருக்கிறார். சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
எல்லை பிரச்சனை குறித்து சீனா பேச்சுவார்த்தை
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைகள், இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளன. கல்வான் மோதலுக்குப் பிறகு இதுவே பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் என்பதால், இது இரு நாடுகளின் உறவில் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி சீன பயணத்துக்கு முன்னதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்த மாதம் 18ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
இந்தியா, சீனா உறவால் டிரம்ப் அதிர்ச்சி
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலுடன் எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை அவர் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எல்லையில் தொல்லை கொடுத்து வந்த சீனா, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறவை வலுப்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளதை டிரம்ப் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனால் இந்திய, சீன உறவு அவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
டிரம்ப்புக்கு எதிராக 3 எதிரி நாடுகளும் கூட்டணி
இது மட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியாவுக்கு வர விரும்புவதாக இஸ்ரேல் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் அமெரிக்கா வரி போட்டு அச்சுறுத்தினாலும் ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய வலிமையான நாடுகளுடன் பிரதமர் மோடி கைகோர்க்க உள்ளது உலக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவுக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பரம எதிரியாக உள்ளன. இப்போது இந்தியாவும் எதிரி நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த மூன்று எதிரி நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக இணைய உள்ளது டொனால்ட் டிரம்பின் அடிவயிறை கலங்கச் செய்துள்ளது.
