அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இருவரும் ஒரே மேடையில் விவாதத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். ஹோப் ஹிக்சுக்கு தொற்று உறுதி ஆனதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ட்வீட் செய்து டிரம்ப்;- கொரோனாவில் இருந்து இருவரும் மீண்டு வருவோம் என பதிவிட்டுள்ளார். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.