அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை சந்தித்து, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கத்தாரின் தோஹாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இருவரும் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தை கட்டமைக்க வேண்டியதில்லை என்று டிரம்ப் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவே கட்டமைக்கட்டும்:
கத்தார் தோஹாவில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை சந்தித்த டிரம்ப், ''இந்தியாவில் ஆப்பிள் நிறுவன கட்டமைப்பு பணிகளை நீங்கள் மேற்கொள்வதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் (இந்தியா) தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்'' என்று குக்கிடம் கூறியதாக செய்தி வெளியானது. இதை ப்ளூம்பெர்க் உறுதி செய்துள்ளது.
அவர்களது சந்திப்பை தொடர்ந்து, "அமெரிக்காவில் ஆப்பிள் உற்பத்தியை அதிகரிக்கும்" என்று டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா மீதான அனைத்து வரிகளையும் நீக்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் கட்டமைப்பதை நாங்கள் விரும்பவில்லை: டிம் குக்கிடம் டிரம்ப்:
"டிம் குக்குடன் எனக்கு ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. நான் அவரிடம் சொன்னேன். என் நண்பரே, நான் உங்களை மிகவும் நன்றாக நடத்துகிறேன். நீங்கள் 500 பில்லியன் டாலர்களுடன் வருகிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் கட்டுமானத்தை உருவாக்கி வருவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் உருவாக்குவதை நான் விரும்பவில்லை. நீங்கள் இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் இந்தியாவில் கட்டமைக்கலாம். ஏனென்றால் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். எனவே இந்தியாவில் விற்பனை செய்வது மிகவும் கடினம். அவர்கள் (இந்தியா) எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதில் அடிப்படையில் அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்க மாட்டோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். நாங்கள் உங்களை மிகவும் நன்றாக நடத்துகிறோம். நீங்கள் பல ஆண்டுகளாக சீனாவில் நிறுவிய அனைத்து ஆலைகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம். தற்போது நீங்கள் இந்தியாவில் கட்டமைப்பதை நாங்கள் விரும்பவில்லை'' என்று டொனால்ட் டிரம்ப் கூறியதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தார் வணிக நிர்வாகிகளுடனான சந்திப்பின் போது, "இந்தியா எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதன்படி, எங்களிடம் எந்த வரியும் இந்தியா வசூலிக்கத் தயாராக இல்லை" என்று டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி அதிகம்
ஆப்பிள் நிறுவனம் அதன் முதன்மை உற்பத்தி தளமான சீனாவில் அதிக கட்டணங்களை தவிர்ப்பதற்காக, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கும் திட்டத்தை துரிதப்படுத்தி வருகிறது. தற்போது, ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் விற்கும் 60 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களில் 80% சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ராய்ட்டர்ஸ் ஆய்வின்படி, ஐபோன்களுக்கான உற்பத்தி விலைகள் சீனாவை விட இந்தியாவில் 5-8% அதிகம், மேலும் சில சூழ்நிலைகளில், இடைவெளி 10% ஐ எட்டக்கூடும்.
சென்னையில் இருந்து ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி
டிரம்பின் வரிகளைத் தவிர்ப்பதற்காக, ஆப்பிள் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில், அது அமெரிக்காவிற்கு 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள கிட்டத்தட்ட 600 டன் ஐபோன்களை அனுப்பியது. அதன் ஒப்பந்ததாரர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா இரண்டும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதில் சாதனை படைத்தன. இவை சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஃபாக்ஸ்கான் மட்டும் 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சாதனங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்தியாவில் ஐபோன் விற்பனை
ஆப்பிள் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில், சுமார் 40–45 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்தது. இது உலகளவில் அதன் மொத்த உற்பத்தியில் 18–20% ஆகும். அவற்றில் சுமார் 12 மில்லியன் இந்தியாவில் விற்கப்பட்டன. 13 மில்லியன் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கும், 14–15 மில்லியன் அமெரிக்காவிலும் விற்கப்பட்டன.
