WHO மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தில் வெளியேறியது அமெரிக்கா; சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று இருக்கிறார். அவர் என்னென்ன திட்டங்களை வாபஸ் பெற்றார் என்று பார்க்கலாம்.

Donald Trump first sign to exit from Paris climate treaty and WHO to threaten China

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று இருக்கிறார். இவர் பதவியேற்ற கையுடன் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் இருந்த 78  திட்டங்களை இனி செயல்படுத்துவதில்லை என்ற கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேறுவதாக தனது ஆதரவாளர்கள் முன்பு கோப்புகளில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

சுதந்திரமான பேச்சுரிமையை திரும்ப கொண்டு வருதல், கருத்துரிமை, முந்தைய ஆட்சியைப் போன்று அரசியல்வாதிகளை நிர்வாக ரீதியாக பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது, 2021 கேபிடல் ஹில் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சுமார் 1,500 பேருக்கு மன்னிப்பு வழங்குவது, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வாஷிங்டனை விலக்குவது, டிக் டாக் மீதான தடையை 75 நாட்கள் தாமதப்படுத்துவது மற்றும் பைடன் காலத்தில் பின்பற்றப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து செய்வது போன்ற உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

வாஷிங்டன்டிசியில் இருக்கும் கேபிடல் ஒன் அரினாவில் கையெழுத்திட்ட பின்னர் ஓவல் அலுவலகத்திற்கு சென்றார் டொனால்ட் டிரம்ப். கையெழுத்திட்ட பேனாவை டிரம்ப் கூட்டத்தில் தூக்கி எறிய அவரது விசுவாசிகள் பெற்றுக் கொண்டனர். ''இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஆட்சியாளர்கள் ஆட்சி செய்துள்ளனர். முந்தைய நிர்வாகத்தின் கிட்டத்தட்ட 78 அழிவுகரமான மற்றும் மோசமான நிர்வாக நடவடிக்கைகளை நான் ரத்து செய்கிறேன்'' என்று கூட்டத்தினரிடையே டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் வேண்டாம் என்று கூறிய திட்டங்கள் என்னென்ன?
1. பைடன் ஆட்சியின் 78 நிர்வாக நடவடிக்கைகளை நிறுத்துதல்
2. டிரம்ப் நிர்வாகம் அரசாங்கத்தின் முழு கட்டுப்பாட்டைப் பெறும் வரை அதிகாரிகள் விதிமுறைகளை வெளியிடுவதை தடுத்தல் 
3. ராணுவம் மற்றும் வேறு சில அத்தியாவசியப் பகுதிகளைத் தவிர அனைத்து  பணியமர்த்தல்களையும் நிறுத்தி வைத்தல் 
4. கூட்டாட்சி ஊழியர்கள் முழுநேர பணிக்கு திரும்புதல் 
5. அன்றாட செலவு நெருக்கடியைத் தீர்க்க ஒவ்வொரு துறை மற்றும் நிறுவனத்திற்கும் உத்தரவு
6. ​​பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுதல்
7. பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும் சுதந்திரமான பேச்சுத் தணிக்கையை தடுப்பதற்கும் அரசாங்க உத்தரவு
8. முந்தைய நிர்வாகத்தின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கத்தை ஆயுதமாக்குவதை முடிவுக்குக் கொண்டுவருதல்
9. உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல் போன்றவற்றில் டிரம்ப் கையெழுத்திட்டார் 

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்:
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியது ஓராண்டுக்குள் முறைப்படுத்தப்படும். இதற்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்திற்கு வெளியே இருக்கும் ஈரான், லிபியா, ஏமன் போன்ற நாடுகளுடன் புதிய ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஈடுபடும் என்பதையும் டிரம்ப் உறுதிபடுத்தி இருக்கிறார். சீனா எந்தவித தண்டனையும் இல்லாமல் மாசுபடுத்தும்போது, அமெரிக்கா தனது சொந்த தொழிற்சாலைகளை எந்தவிதத்திலும் முடக்காது என்பதையும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு:
உலகம் முழுவதும் தாக்குதலை ஏற்படுத்திய கோவிட் போன்ற பேரழிவுகளை உலக சுகாதார அமைப்பு மோசமாக கையாண்டு இருப்பதாக துவக்கத்தில் இருந்தே டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். கோவிட் தொற்றுநோய் பரவலின்போது, உலக சுகாதார அமைப்பை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் அமெரிக்கா கூறி வந்தது. இந்த நிலையில்தான் இந்த முடிவை டிரம்ப் எடுத்து இருக்கிறார். 

சீனாவுக்கு செக் வைத்த டிரம்ப்:

கோவிட் தொற்று பரவியபோது அமெரிக்காவிடம் இருந்து அதிக நிதியை உலக சுகாதார அமைப்பு கோரி இருந்தது. ஆனால், இந்த அமைப்பில் இருக்கும் சீனா போன்ற முக்கிய நாடுகள் பெரிய அளவில் நிதி ஒதுக்கவில்லை. இதை அப்போதே அமெரிக்கா குறிப்பிட்டு இருந்தது. உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதே அமெரிக்காதான். இந்த நிதியைக் கொண்டுதான் தற்போது மனித குலத்திற்கு சவாலாக இருந்து வரும் காலரா, டெங்கு, எம்பாக்ஸ், மார்பர்க் போன்ற நோய்களை உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருப்பது பல வகைகளிலும் உலக சுகாதார அமைப்புக்கு நிதி நெருக்கடியை  மட்டுமின்றி திட்டங்களை செயல்படுத்துவதிலும் முடக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios