இந்தியாவில் தானாகவே அழிகிறதா கொரோனா..?? மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட குட் நியூஸ்..!!
இன்னும் சில வாரங்களில் அமெரிக்காவையே மிஞ்சக் கூடிய அளவில் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து சுமார் 92 சதவீதம் பேர் மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவல் நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4.78 கோடி பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 லட்சத்து 20 ஆயிரத்து 534 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 3.43 கோடி பேர் உலகளவில் வைரஸ் தொட்டியிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 96 லட்சத்து 92 ஆயிரத்து 528 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவில் இதுவரை 83 லட்சத்து 13 ஆயிரத்து 876 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சில வாரங்களில் அமெரிக்காவையே மிஞ்சக் கூடிய அளவில் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் கவலை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் புது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகக் கூடிய கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், கொரோனா தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, இந்தியாவில் அன்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 310 பேருக்கு தொற்று பதிவானதாகவும், ஆனால் அன்று ஒரே நாளில் 58 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் எண்ணிக்கையைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும், இதுவரை நலம் பெற்றோர் எண்ணிக்கை 76 லட்சத்தை கடந்தது என்றும் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு 5. 41 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,23,097 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் படிப்படியாக குறைந்து வருகிறது, அந்த வரிசையில் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சராசரியாக நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு குறையாமல் நோய்த்தொற்று பதிவாக்கி வந்தநிலையில், அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரையிலான காலகட்டத்தில் நோய் தொற்றின் எண்ணிக்கை 45 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் 91.96 சதவீதமாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளது. இது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.