தென்சீனக்கடல் எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறினால், தாங்கள் உதவிக்கு அமெரிக்காவை அழைக்க நேரிடும் என பிலிப்பைன்ஸ் சீனாவை எச்சரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் மிக்க தென் சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளை அமைத்து, இராணுவ மயமாக்கி வருகிறது. ஆனால் அப்பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக பிலிப்பைன்ஸ் தாக்கல் செய்த வழக்கை சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்து, தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீன வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என தீர்ப்பு வழங்கியது. 

ஆனாலும் அக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமெரிக்கா, சீனாவுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீன கடலில் சீனா உருவாக்கி வரும் செயற்கை தீவுகள், சட்டத்திற்குப் புறம்பானது எனவும், அதை அமெரிக்கா மட்டுமல்ல எந்த சர்வதேச நாடும் ஏற்றுக் கொள்ளாது எனவும் கூறியுள்ளது. எந்த ஒரு ஒருதலைப்பட்சமான, கட்டாய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால் சீனா  தங்கள் பிராந்தியத்தின் உரிமைகளை காத்துக் கொள்வதில், உறுதியாக நிற்கும் என அந்நாடு பதிலுக்கு கூறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸ்க்கும் இடையே 1951-இல் பாதுகாப்பு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. அதாவது இருநாடுகளும் தாக்குதலை எதிர்கொண்டால், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்நிலையில் தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதும் சீன கடற்படை பிலிப்பைன்சில் உள்ள கப்பல்களை தொடர்ந்து இடைமறித்து வருகிறது. 

இந்நிலையில் சீனாவின் இந்த ஆதிக்க நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என பிலிப்பைன்ஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தியோடோரோ லோக்சின் ஜூனியர், தொடர்ந்து சீன அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பட்சத்தில், நாங்கள் அமெரிக்காவின் உதவியை நாடுவோம். அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை நாங்கள் பயன்படுத்துவோம். தொடர்ந்து எங்கள் கப்பல்களை ஸ்பாட்டிலி தீவுக்கு அருகே சீனா வழிமறித்து வருகிறது. இதை ஒருபோதும் பிலிப்பைன்ஸ் பொறுத்துக் கொள்ளாது. கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட வணிக கப்பல்கள், தீத்து தீவுக்கு அருகே காணப்பட்டன. போர்க் கப்பல்கள் மற்றும் சீனாவின் கடல் சார்  சட்ட அமலாக்க படையின் கப்பல்களும் அடிக்கடி பகுதியில் காணப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் கடற்படையில் சீன கடற்படையைவிட பலமானது. சீனா  தொடர்ந்து பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிய இது தொடரக்கூடாது என பிலிபைன்ஸ் எச்சரித்துள்ளது.